

பாலிவுட் நடிகையான கீர்த்தி குல்ஹாரி, ‘சைத்தான்’, ‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.43 லட்சத்தை இழந்துள்ளார். இவருக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி, வங்கியிலிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது கடன் அட்டையைப் பயன்படுத்தி 2,525 அமெரிக்க டாலர் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த கீர்த்தி, உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு விவரங்களை உறுதிப்படுத்தினார். அப்போது, அவரது கடன் அட்டை மூலம் 4 தனித்தனி பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.2.44 லட்சத்துக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலும் பணப்பரிவர்த்தனை நடைபெறாமல் தடுக்க வங்கி அதிகாரிகள் அவரது கடன் அட்டையை உடனடியாக முடக்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கீர்த்தி குல்ஹாரி, மும்பை அம்போலி போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.