‘தன்னை விட பாதி வயது இளம் நாயகிகளுடன் ஜோடியாக நடிப்பது மட்டும் நியாயமா?’ - ஹீரோக்களுக்கு இஷா கோபிகர் கேள்வி

நடிகை இஷா கோபிகர்

நடிகை இஷா கோபிகர்

Updated on
1 min read

இந்தி நடிகையான இஷா கோபிகர், தமிழில் காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, ஜோடி, அயலான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் திரையுலகில் நிலவும் வயது அடிப்படையிலான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வயதானால் அதை அனுபவம் என்கிறார்கள். பெண்களுக்கு வயதானால் அதைப் பிரச்சினை என்கிறார்கள். இது விசித்திரமாக இல்லையா ? முன்னணி நடிகர்கள், தங்களை விடப் பாதி வயதுடைய இளம் பெண்களுடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார்கள்.

அது மிகவும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வயதான பிறகும் ஒரு பெண் ஸ்டைலாகவோ, தன் கருத்துகளை வெளிப்படையாகப் பேசினாலோ அல்லது தனது தனித்துவத்தைக் கொண்டாடினாலோ, ‘உன் வயதுக்கு ஏற்றபடி நடந்துகொள்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். காலம் செல்லச் செல்ல ஒரு பெண், இன்னும் ஆழமானவளாக, வலிமையான தன்னம்பிக்கை கொண்டவளாக மாறுகிறாள் என்பதே உண்மை.

வயதான தோற்றமும் உடல் சுருக்கங்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கிறது. வயதாவது இயற்கையான ஒன்று. உங்கள் தாய், மனைவி, சகோதரி, மகள், ஏன் உங்களுக்கும் கூட ஒருநாள் வயதாகும். அதனால், வயதாவதை அவமானமாகவோ, பலவீனமாகவோ பார்க்காதீர்கள்.

எல்லா வயதிலும் பெண்களை மதியுங்கள். ஒரு பெண்ணின் வயதைப் பார்க்காமல், அவளது வாழ்நாள் பயணத்தையும் மன வலிமையையும் மதியுங்கள். கண்ணியத்துக்குக் காலாவதி தேதி எதுவும் இல்லை, தன்னம்பிக்கைக்கு வயது வரம்பு கிடையாது.

அழகை வயதின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டே உலகம் வெகு நாட்களைக் கழித்துவிட்டது. உண்மையான அழகு என்பது ஒருபோதும் வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. இவ்வாறு இஷா கோபிகர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகை இஷா கோபிகர்</em></p></div>
Kaathal: The Core - இணையரை ரட்சித்து மீண்ட ‘மீட்பர்’ ஓமனா | திரை தேவதைகள் 25

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in