மீண்டும் இணைகிறது ‘லகான்’ கூட்டணி

மீண்டும் இணைகிறது ‘லகான்’ கூட்டணி
Updated on
1 min read

‘லகான்’ படக் கூட்டணியான ஆமிர்கான் – அசுதோஷ் கோவாரிகர் மீண்டும் புதிய படமொன்றில் இணைந்து பணிபுரியவுள்ளது.

2001-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வெளியான படம் ‘லகான்’. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பல்வேறு விருது வழங்கும் விழாக்களில் விருதுகளையும் குவித்திட்டது. இப்படத்தினை அசுதோஷ் கவுரிகர் இயக்க ஆமிர்கான் நாயகனாக நடித்து தயாரித்திருந்தார். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் செய்வது உறுதியாகி இருக்கிறது.

ஃபர்ஹான் அக்தர் தயாரிக்கவுள்ள இப்படம் 1952-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இதன் திரைக்கதையை ‘டங்கல்’ படத்தின் திரைக்கதையில் பணிபுரிந்த பியூஷ் குப்தா மற்றும் நீரஜ் சிங் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இப்படம் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான லாலா அமர்நாத்தின் வாழ்க்கை வரலாற்று படமல்ல.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வழிநடத்தியவர் லாலா அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கதாபாத்திரத்தில் தான் ஆமிர்கான் நடிக்கவுள்ளார். இதற்காக பிரத்யேக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 15-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் தான் ‘லகான்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைகிறது.

மீண்டும் இணைகிறது ‘லகான்’ கூட்டணி
சபாநாயகரை கைப்பிடித்து அமரவைக்கும் மரபு! - பேரவையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in