

சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல மராத்திய இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுளே, சிவாஜி பற்றிய திரைப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு சரித்திர நாயகர்களின் கதைகளை திரைப்படமாக்கவும் பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட சத்ரபதி சிவாஜியின் தளபதி ’தன்ஹாஜி’ பற்றிய திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது சத்ரபதி சிவாஜி பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது. ’சாய்ராட்’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற மராத்திய இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுளே இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ரிதேஷ் தேஷ்முக், சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மூன்று பாகமாக வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகிறது. அஜய்-அதுல் இணை இந்தப் படத்துக்கு இசையமைக்கிறது.
இன்று இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள நாக்ராஜ், "இது கனவின் வாசலில் நிற்பதைப் போல இருக்கிறது. சிவாஜி மஹாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரிதேஷ் தேஷ்முக், அஜய்-அதுல் உடன் இணைந்து, சத்ரபதி சிவாஜி பற்றிய திரைப்படத்தை, மூன்று பாகங்களாகக் கொண்டு வருகிறோம் என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாக்ராஜின் இந்த ட்வீட் மராத்திய மொழியில் இருப்பதால் இந்த மூன்று பாகங்களுமே மராத்திய மொழியில் எடுக்கப்படக்கூடும் என்று தெரிகிறது. இந்த ட்வீட்டுன் சிறிய வீடியோ ஒன்றையும் நாக்ராஜ் பகிர்ந்துள்ளார்.
தவறவிடாதீர்