

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினிகாந்த் பங்கேற்கும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை மோஷன் போஸ்டராக வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளார் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படித் தப்பி வருவது குறித்து விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார்.
உலகப் புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கெனவே பங்கேற்றுள்ளனர்.
அந்த வரிசையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக பியர் கிரில்ஸ் இன்று இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளர்.
"நடிகர் ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் டிவி நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறேன். நான் நிறைய நட்சத்திரங்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். ஆனால் ரஜினி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தியாவை நேசிக்கிறேன். #ThalaivaOnDiscovery" என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் மற்றொரு ட்வீட்டில், "ரஜினிகாந்த் எப்போதுமே ஓர் அதிரவைக்கும் நட்சத்திரமாக இருந்துள்ளார். ஆனால் கானகம் வேறு... அவரைப் போன்ற ஒரு பிரபலத்துடன் நேரத்தை செலவழித்தது மகிழ்ச்சி. அவரை முழுவதுமாக வேறொரு பரிமாணத்தில் பார்த்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.