

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தைத் தயாரிக்க கரண் ஜோஹர் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
'பிகில்' படத்தின் படப்பிடிப்பின் போதே, ஷாரூக்கானின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அட்லி எனத் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐபிஎல் போட்டிக்கான சென்னைக்கு வந்த போது அட்லியைச் சந்தித்தார் ஷாரூக்கான்.
'பிகில்' படம் வெளியானவுடன் வெளிநாட்டுக்குச் சென்றார் அட்லி. அங்கு ஷாரூக்கான் படத்துக்கான திரைக்கதை பணிகள் அனைத்தையும் முடித்து அனுப்பிவைத்தார். அதில் ஷாரூக்கான் பல்வேறு விஷயங்களை மாற்றச் சொல்லவே, இந்தக் கூட்டணி இணையுமா என்ற கேள்வி எழுந்தது.
தற்போது ஷாரூக்கான் கூறிய மாற்றங்கள் அனைத்தையும் முடித்துவிட்டார் அட்லி. மும்பையில் முகாமிட்டுள்ள அட்லி, ஷாரூக்கானை சந்தித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையும் முடித்துவிட்டார். ஆகையால் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது.
மேலும், இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அட்லி. அதில் கதை, திரைக்கதை, எவ்வளவு பட்ஜெட், நடிகர்கள் உள்ளிட்டவை பேசப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில் ஷாரூக்கான் - அட்லி படத்தைக் கரண் ஜோஹர் தயாரிப்பார் எனத் தெரிகிறது.
தவறவிடாதீர்