Published : 25 May 2023 02:34 PM
Last Updated : 25 May 2023 02:34 PM

‘கேள்வி - கிண்டலின் நாயகன்’ கவுண்டமணியும் 15 குறிப்புகளும் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

‘Comedy is a serious Business’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டி அந்த உணர்வுகள் ஒரே புள்ளியில் குவியும்போது அவர்களை அழவைத்து விடலாம். ஆனால் தாம் சொல்லவந்த அல்லது செய்ய நினைத்த நகைச்சுவையை பார்வையாளருக்கு புரியவைத்து அந்த நொடிப்பொழுதில் சிரிக்கவைப்பது ஒரு கலைஞனுக்கு எளிதல்ல. அப்படி தனக்கென ஒரு பாதையை வகுத்து ஒரு தலைமுறையையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த திரைக் கலைஞர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று (மே 25). அவர் குறித்த 15 குறிப்புகள்:

 • கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். அவர் திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர்.
 • 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்டமணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார்.
 • நண்பர்களிடையே பேசும்போது இடையிடையே ஓஷோவின் மேற்கோள்களை குறிப்பிடுவது கவுண்டமணியின் வழக்கமாம். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்று கவுண்டமணி குறித்து நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் அடிக்கடி குறிப்பிடுவார்.
 • 16 வயதினிலே படத்தில் ‘சுப்பிரமணியன்’ என்ற பெயரை ’கவுண்டமணி’ என்று மாற்றியவர் பாரதிராஜா.
 • 'கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'வாழைப்பழ' காமெடி உலகப் புகழ் பெற்றது. அதன் பிறகு கவுண்டமணி-செந்தில் இணை தமிழ் சினிமாவின் தலைசிறந்த நகைச்சுவை இணையாக உருவெடுத்தது. கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்து 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.

 • 1982ல் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ கவுண்டமணிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் 84ல் வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’ செந்திலுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன.
 • கவுண்டமணி 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் 12.
 • 986 முதல் 88 வரை ‘பணம் பத்தும் செய்யும்’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘கிளி ஜோசியம்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார். எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் நகைச்சுவை பாதைக்கே திரும்பினார்.
 • ‘ரகசிய போலிஸ்’, ‘ஞானப்பழம்’, ‘முத்துக் குளிக்க வாரியளா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் கவுண்டமணி.
 • 1996ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து நாயகர்களுக்கு இணையாக படம் முழுவதும் வரக்கூடிய பாத்திரங்களில் நடித்தார் கவுண்டமணி. அஜித், விஜய் போன்ற அப்போது வளர்ந்து கொண்டிருந்த நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம்பெற்றார்.

 • கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன். சுருளிராஜன் குறித்தும் அவரது நகைச்சுவை குறித்தும் பல தருணங்களில் பெருமிதத்துடன் குறிப்பிடுவார்.
 • சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவருடனும் இணையும்போது கவுண்டமணியின் ஆளுமை பெரிதாக திரையில் வெளிப்படும். உதாரணம்: ‘மாமன் மகள்’, ‘தாய் மாமன்’, ‘நடிகன்’, ’திருமதி பழனிசாமி’ உள்ளிட்ட படங்கள்.
 • 90களில் பெரும்பாலும் செந்திலுடன் இணைந்து நடித்தாலும் பல படங்களில் தனி ஆவர்த்தனத்திலும் பட்டையைக் கிளப்பினார். 'புது மனிதன்', 'மை டியர் மார்த்தாண்டன்', 'நடிகன்', 'பிரம்மா', 'சிங்காரவேலன்', 'வியட்நாம் காலனி', 'உழைப்பாளி', 'மன்னன்', 'சூரியன்' உள்ளிட்ட படங்களில் செந்திலின் துணை இல்லாமலே காமெடியில் கலக்கினார்.
 • சினிமா வட்டத்தில் பெரிதாக யாருடனும் நெருங்கிய நட்பு பாராட்டாதவர் கவுண்டமணி. எனினும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக், மணிவண்ணன் ஆகியோரிடம் சினிமாவைத் தாண்டிய அவருக்கு நட்பு உண்டு.
 • சமூக அரசியல் விமர்சனங்களையும் நகைச்சுவையுடன் கலந்து பல படங்களில் கொடுத்தவர் கவுண்டமணி. பெரிதும் மதிக்கப்படும் எந்த ஒரு சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தவும் கிண்டலடிக்கவும் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x