Published : 23 Apr 2023 10:03 AM
Last Updated : 23 Apr 2023 10:03 AM

யானை முகத்தான்: திரை விமர்சனம்

யானை முகத்தான் படத்தின் காட்சி

ஆட்டோ ஓட்டுநரும் தீவிர விநாயகப் பக்தருமான கணேசன் (ரமேஷ் திலக்), வாடகைக் கொடுக்க முடியாமலும் கடன் நெருக்கடியாலும் திண்டாடுகிறார். ஏமாற்று வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார். அவர் வீட்டின் உரிமையாளர் மல்லிகா (ஊர்வசி), கணேசனிடம் கண்டிப்பு காட்டினாலும் பல வழிகளில் அவருக்கு உதவுகிறார். இந்நிலையில் விநாயகர் உருவம் எங்கு, எந்த வடிவத்தில் இருந்தாலும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. திடீரென்று ஒரு நாள் கணேசன் முன் தோன்றும் ஒருவர், (யோகி பாபு) ‘நான் தான்’ விநாயகர் என்கிறார். கணேசன் நல்லவனாக, நேர்மையாக ஒருநாள் வாழ்ந்தால், தன் உருவத்தைக் காண்பிப்பதாக உறுதி அளிக்கிறார். இந்த நிகழ்வு கணேசன் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது மீதிக் கதை.

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, 'மனிதனின் உள்ளம்தான் கோயில், அதற்குள்தான் கடவுள் வசிக்கிறார், நல்லவராக வாழ்வதன் மூலம் மட்டுமே கடவுளை உணர முடியும்' என்னும் செய்தியைச் சொல்ல முயன்றிருக்கிறார். இதற்கு கடவுள் உருவம் தெரியாமல் போவது, கடவுள், மனித உருவத்தில் வருவது போன்ற விஷயங்களை நகைச்சுவையுடன் சேர்த்து கலகலப்புடன் சொல்ல நினைத்திருக்கிறார்.

ஆனால் படம் தொடங்கி, மையப் பகுதிக்கு வருவதற்கே நீண்ட நேரம் ஆகிறது. கணேசனின் வாழ்க்கைச் சூழல் விரிவாகச் சொல்லப்பட்டாலும் அவர் ஏமாற்றிப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? என்பது போன்ற விஷயங்கள் சரியாகச் சொல்லப்படாததால் கணேசனின் உணர்வுகளுடன் ஒன்ற முடியவில்லை. நகைச்சுவை முயற்சிகளும் சிரிக்க வைக்கவில்லை. முதல் பாதியின் பிற்பகுதியில் விநாயகர் உருவம் கணேசன் கண்ணுக்குத் தெரியாமல் போவதால் அவர் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களும் விநாயகர் மனித ரூபத்தில் வந்ததும் நிகழும் உரையாடல்களும் ரசிக்க வைக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதியில் கடவுள், நன்மை, தீமை, மனிதநேயம் ஆகியவை தொடர்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

கணேசனுக்கு விநாயகரின் உண்மையான உருவம் உணர்த்தப்படும் இறுதிக் காட்சி சிறப்பாக உள்ளது. இதேபோல் உணர்வுபூர்வமான தாக்கம் செலுத்தும் காட்சிகள் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முதன்மைக் கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் சிறப்பாகநடித்திருக்கிறார். ஊர்வசி வழக்கம்போல் மனதில் நிற்கும் நடிப்பைத் தந்திருக்கிறார். நண்பனாகக் கருணாகரன், கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார். யோகிபாபு கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கடவுள் தன்மைக்குத் தேவையான மந்தகாசப் புன்னகையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பரத் சங்கரின் பின்னணி இசைகாட்சிகளுக்கு வலுகூட்டுகிறது. கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவு படத்தின் அமானுஷ்ய உள்ளடக்கத்தைப் பார்வையாளர்களுக்குச் சரியாகக் கடத்துகிறது.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘யானை முகத்தான்' கொண்டுவந்திருக்கும் மேன்மையான செய்தி அனைவரையும் சென்றடைந்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x