Published : 20 Apr 2023 07:56 AM
Last Updated : 20 Apr 2023 07:56 AM

‘ஆஸ்கர் வாங்குவது முக்கியமில்லை’ - இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

வெற்றிமாறன் | கோப்புப்படம்

தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் (சிஐஐ), தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.சாமிநாதன், நடிகர் கார்த்தி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிஐஐ-யின் தென்மண்டல தலைவர் சத்யஜோதி தியாகராஜன், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சிஐஐ துணைத் தலைவர் ஆர். நந்தினி, வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி, மஞ்சு வாரியர், நடிகை சுகாசினி, இயக்குநர் பசில் ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது கூறியதாவது: கலைக்கு மொழியில்லை, எல்லை இல்லை என்று சொல்வார்கள். ஆனால், கலைக்கு நிச்சயமாக மொழி இருக்கிறது, கலாச்சாரம் இருக்கிறது. எல்லை இருக்கிறது. கலையை நுகர்வோர்களுக்குத்தான் அந்த எல்லைகள் இல்லை. அது எல்லையை கடந்து போகும். கரோனா காலத்தில் இதைப் பார்த்தோம்.

ஆஸ்கர் வாங்குவதைவிட, நம் மக்களின் படங்கள், உலக அளவில் கவனம் பெறுவதுதான் இதில் முக்கியமானது. தென்னிந்திய படங்கள் இப்போது இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம், நம் மக்களின், மண்ணின் கதையை சொல்வதுதான். நம் அடையாளங்களோடு, தனித்துவங்களோடு, நம் பெருமைகளோடு படங்கள் பண்ணுவதுதான் இந்த வீச்சுக்கு காரணம் என்று நினைக்கிறேன். அது தொடர வேண்டும். இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

விழாவில், ஆஸ்கர் விருதுபெற்ற ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ், ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x