Published : 31 Aug 2017 08:50 AM
Last Updated : 31 Aug 2017 08:50 AM

அரசியலுக்கு நேரடியாகவே வந்துவிட்டேன்: கோவையில் நடிகர் கமல் பரபரப்பு பேட்டி

நான் அரசியலுக்கு நேரடியாகவே வந்துவிட்டேன். அரசியல் பிரவேசத்தை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? என்று நடிகர் கமல் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என்னை ட்விட்டர் நாயகன் என்று அரசியல் கட்சியினர் கூறுகிறார்கள். அதை விமர்சனமாகவே பார்க்கிறேன். நான் அரசியல் பிரவேசத்தை எப்போதோ தொடங்கிவிட்டேன். அதை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன.

நான் கோட்டையை நோக்கி நகர்ந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். தொழிற்சங்கங்கள் குறை கூறுவதற்காக கோட்டைக்குச் செல்வதைப் போல. இதற்கு வேறு அர்த்தம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல. போராட்டத்தை எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றார்.

முன்னதாக, கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற, அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க கோவை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.தங்கவேல் இல்லத் திருமண விழாவில் கமல் பேசியதாவது:

இந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று என்னைப் பார்த்துக் கேட்டால், எனக்கு கோபம் வருவதில்லை. சிரிப்புதான் வருகிறது.

சிலர் தன்னிலை மறந்தும் சிரிக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சூழ்நிலையையும் மறந்து சிரிக்கிறார்கள். தன்னிலை மறந்தவர்களுடன் வாக்குவாதம் செய்வதும், புத்தி கூறுவதும் எனது நோக்கமல்ல.

திருடனுக்கு அனுமதி

எனினும், இந்த அரசியலை இப்படியே விட்டுவைக்கக்கூடாது. அரசியல்வாதிகள் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. நீங்கள் தேர்வு செய்தவர்கள்தான். வாக்குக்காக காசு வாங்கியபோதே திருடனை அனுமதித்து விட்டீர்கள். கஜானாவில் இருந்து பெரும் பங்கை அவர்கள் எடுத்துக்கொண்டு, சோற்றுப்பருக்கையை உங்களை நோக்கி வீசிவிட்டார்கள். அதன் பலனே இது. இந்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இனியும் குற்றம் செய்யாமல் இருக்க சபதமேற்போம். ரூ.500-க்கும், ரூ.1,000-க்கும் விற்றது வாக்கை அல்ல. வாழ்க்கையை. எனவே, களை பறிக்க வேண்டியது வயலில் மட்டுமல்ல, வாழ்விலும். நான் அரசியலுக்காக உங்களை தூண்டிவிடவில்லை. கடமையை நினைவூட்டுகிறேன்.

தொடர்ந்து போராடுங்கள்

இதை நான் திருமண விழாவாகக் கருதவில்லை. அரசியலுக்கான ஆரம்ப விழாவாகக் கருதுகிறேன். இந்த சமூகத்தின் மீதான கோபம், அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தொடர்ந்து போராடுங்கள். அதற்கு முன் உங்கள் கையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். அரசியலை மாற்ற வேண்டிய கடமை நமக்குண்டு.

நாம் வெறுமனே சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. அதை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும். தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று என்னைப் பார்த்து சிலர் கேட்கிறார்கள். நான் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்கு தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா? என்று கமல் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x