Published : 27 Jan 2023 12:52 PM
Last Updated : 27 Jan 2023 12:52 PM

“ஜூடோ ரத்னம் போன்ற மனிதரைப் பார்ப்பது அபூர்வம்” - ரஜினிகாந்த் உருக்கம்

நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: "மறைந்த ஜூடோ ரத்னம் மாதிரி ஒரு மனிதரை சண்டைப் பயிற்சியாளர்கள் மத்தியில் பார்ப்பது என்பது உண்மையாகவே ஆபூர்வமான ஒன்று" என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாகக் கூறியுள்ளார்.

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், கூறியது: "ஒரு கன்னடப் படம். அதிலிருந்துதான் எனக்கு பழக்கமானார். அதன்பிறகு தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நான் நடித்த எல்லா படங்களிலும் ஜூடோ சார்தான் சண்டைப் பயிற்சியாளர். அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அவருடைய சிஷ்யர்கள் சுப்பராயன், தர்மா என்று எத்தனையோ பேர் மிகப் பெரிய சண்டைப்பயிற்சியாளர்களாக வந்துள்ளனர்.

படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் அவருடன் சண்டையிடும் பைஃட்மேன்களின் பாதுகாப்புக்குத்தான் அவர் முதலில் முக்கியத்துவம் கொடுப்பார். ரொம்ப மென்மையான மனிதர். முரட்டுக்காளை படத்தின் ரயில் சண்டைக்காட்சி இப்போது வரை யாராலும் மறக்க முடியாது.

அந்த மாதிரி ஒரு மனிதரை சண்டைப் பயிற்சியாளர்கள் மத்தியில் பார்ப்பது என்பது உண்மையாகவே ஆபூர்வமான ஒன்று. அவர் சரித்திரத்தில் சாதித்து மிகப்பெரிய ஒரு சாதனையை செய்து, பூரண வாழ்க்கை வாழ்ந்து 93 வயதில் அமரராகி இருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று அவர் கூறினார்.

ஜூடோ ரத்னம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்தவர் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்னம் (93). 1980-ம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, பாயும்புலி, நெற்றிக்கண், நல்லவன் என பல்வேறு வெற்றிபடங்களில் இவரது சண்டை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டுள்ளன.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கிராப்தர் படத்துக்கு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1959-ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநராக அறிமுகமானார். சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் ஜூடோ ரத்னம் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். அவருக்கு 3 மகன்கள், 5 மகள்கள். ஜூடோ ராமு என்ற மகன் திரைப்பட சண்டை பயிற்சியாளராகவும், பகத்சிங் என்பவர் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x