Last Updated : 29 Dec, 2016 10:59 AM

 

Published : 29 Dec 2016 10:59 AM
Last Updated : 29 Dec 2016 10:59 AM

இதுதான் நான் 57: முக்கியமான அந்த மோதிரம்!

முதன்முறையா மைக்கேல் ஜாக்சனோட ‘பீட் இட்’ பாடலை கேட்டப்போ மனசுக்கு எப்படி ஒரு மாதிரி இருந்துச்சோ, அந்த மாதிரி என்னை அந்தச் சின்ன வயசுல ஆட வெச்ச இன்னொரு பாட்டு, ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு?’. அந்தப் பாடலை எப்போ ரேடியோவில் கேட்டாலும் எழுந்து நின்னு டான்ஸ் ஆடாம, என்னால இருக்கவே முடியாது.

அந்த வயசுல எதுன்னாலும் வெட்கப் பட்டுட்டே இருந்த என்னை, முதன்முதலா ஆட வெச்சப் பாட்டும் அதுதான். எவ் வளவு பிடிக்கும்னு சொல்லத் தெரியலை. அந்த அளவுக்கு அதிகமா பிடிக்கும். இப்படி முதன்முறையா என்னோட லைஃப்ல நடந்த சில முக்கியமான சில விஷயங்களை இங்கே ஷேர் பண்ணப் போறேன்.

ஸ்கூல் கிரவுண்டுல விளையாட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டி.வி-யில் முதன்முதலா பார்த்த விளையாட்டு ஃபுட் பால். இந்த விளையாட்டுக்கு பேரு ஃபுட்பால்னு கூட அப்போ எனக்குத் தெரியாது. ஒருத்தனை ஏமாத்தி இன்னொருத்தன் மடக்கி பந்தைக் கொண்டுபோய் கோல் அடிக்கிறது எனக்கு ரொம்பப் பிடித்தது. மேட்ச் முடியிற வரைக்கும் சிரிச்சிட்டே இருப்பேன். படங்கள்ல நாகேஷ் சார் எப்படி சிரிக்க வைப்பாரோ? அப்படி.

பாட்டி வாங்கிக் கொடுத்த கொக்கு படம் போட்ட சட்டைதான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு ரொம்பப் பிடிச்ச சட்டை. வாரத்தில் எத்தனையோ தடவை அந்தச் சட்டையை எடுத்துப் போட்டிருக் கேன். அது மேல அப்படி ஒரு பைத்தியம்.

சில சமயம் அம்மா எனக்கு வேற சட்டை போட்டா கூட, எனக்கு அந்தக் கொக்கு சட்டைதான் வேணும்னு அழுதிருக்கேன். அந்தச் சட்டை கிழிஞ்சுபோற வரைக்கும் விடவேயில்லை. அதுதான் என் முதல் பேவரைட் சட்டை!

அண்ணன் ராஜுவோட ரெட் கலர் சைக்கிள் ஒண்ணு இருந்துச்சு. முதன்முதலா நான் சைக்கிள்ல ஸ்கூலுக்கு போனதுன்னா ராஜுவோட அந்த சைக்கிள்லதான். சீட்டுல உட்கார்ந்துட்டா அப்படி ஒரு ஃபீலிங் இருக்கும். அதுவும் லூஸா சட்டைப் போட்டுட்டு சைக்கிளை ஓட்டுறப்ப காத்துல பலூன் மாதிரி சட்டை பெருசாகும். அந்த அனுபவத்தோட சைக்கிள்ல போறது பறக்குற மாதிரியே இருக்கும். இந்த டைம்குள்ள, இவ்வளவு ஷார்ப்பா அந்த இடத்தில் இருக்கணும்னு போய் நிற்பேன். இன்னிக்கு ஒரு சின்ன அடிபட்டால் கூட துடிச்சிப் போய்டுறோம். சைக்கிள் கத்துக்குறப்ப பலமுறை கீழே விருந்திருக்கேன். காயமாயிருக்கு. அதெல்லாம் ஒரு விஷயமாவே தோணியது இல்லை.

விவேகானந்தா காலேஜுக்கு எதிர்ல இருந்த எங்க வீடும், அந்த வீட்டுல இருந்த ஊஞ்சலையும் என்னால மறக்கவே முடியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச வீடு அது. மேல் பகுதியில் நாங்க குடியிருந்தோம். வீட்டு ஹாலில் கட்டியிருந்த ஊஞ்சல்ல ஆடுறப்ப வீட்டுக்கு மேல்புறம் இருக்கிற சுவர் வரைக்கும் போய் தொட்டுட்டு வருவேன். வேகமா ஆடுறப்ப முன்னுக்கும் பின்னுக்கும் அப்படி ஒரு ஸ்பீடுல ஊஞ்சல் போய்ட்டு வரும். அந்த இடைவெளியில வீட்டுக்குள்ள ஓட்டுற குட்டி சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊஞ்சல் போய்ட்டு வர்ற இடைவெளியில புகுந்து புகுந்து ரவுண்ட் அடிப்பேன். அந்த முதல் ஊஞ்சலையும், முதல் வீட்டையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நீச்சல்னா என்னன்னு எனக்குத் தெரியவே தெரியாது. ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது, திடீர்னு ஒருநாள் நீச்சல் கத்துக்கணும்னு ஆசை வந்துச்சு. சவேரா ஹோட்டலுக்குப் போய் முதன்முறையா நீச்சல் கத்துக்கிட்டேன். அதே மாதிரி முதன்முறையா கார் ஓட்டக்கத்துக்கிட்ட அனுபவம் ரொம்ப திரில்லிங் கான அனுபவம். ஏன்னா, பயத்துலயே கத்துக்கிட்டேன். மாருதி வேன்லதான் நான் டிரைவிங் கத்துக்கிட்டேன். அதுவும் ஒரே நாள்ல கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். அந்த நேரத்துலதான் லவ் பண்ணிட்டிருந்தேன். அவங்களை எப்படி மீட் பண்றது? எப்போ மீட் பண்றதுன்னு ஒண்ணுமே புரியாம இருந்தேன்னு முன்னாடியே சொல்லிருக்கேனே. அதுக்காகத்தான் நான் கார் ஓட்டவே கத்துக்கிட்டேன்.

முதல் காதல்… அவங்க ஒரு நடிகை. பெயரை இங்கே சொல்ல முடியலை. சினிவுக்குள்ள வந்த நேரம். அப்பா கூட சேர்ந்து வேலை பார்த்துட்டிருந்தேன். எனக்கு பயம். ஆனா, அவங்களுக்கு பயம் இல்லை. ஷூட் பண்றது டூயட் பாட்டா இருந்துச்சுன்னா குளோஸ் அப்ல ஆடும் ஸீன்ல வேற யாரையாவது கூப்பிட்டு செய்து காட்டச் சொல்வேன். ஆனா, அவங்க, ‘‘பிரபுதான் வரணும்’’னு சொல்வாங்க. ஒரு கட்டத்தில் அவங்களைப் பார்த்தாலே, ‘‘நான் இல்லைன்னு சொல்லிடுங்க!’ ’ன்னு சொல்ற அளவுக்கு எனக்கு பயமாயிடுச்சு. ஃபிளைட்ல போகும்போது நான் வேற இடத்தில் உட்கார்ந்திருந்தா கூட என் பக்கத்துல வந்து உட்கார்ந்துடுவாங்க. இதெல்லாம் நடக்கும்போது ஒருமாதிரி பயமாவும், சந்தோஷமாவும் இருக்கும். இப்போ நினைச்சா சின்ன சிரிப்புதான் வருது!

அதே மாதிரி அந்த வயசில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு எல்லாம் போனதே இல்லை. எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் சோழா ஹொட்டல். அது வழியா நானும் ஃபிரெண்ட்ஸும் போறப்போ, ‘‘டேய் இங்கே காபி அஞ்சு ரூபாயாமே?’’ன்னு கேட்பேன். அவங்களும் அதுக்கு, ‘‘என்னடா சொல்றே!’’ன்னு ஆச்சர்யமா கேட்டுட்டு, ‘‘அப்போ தோசை பத்து ரூபாய் இருக்கும்ல’’ன்னு சொல்வாங்க. அதுவும் நம்மை எல்லாம் உள்ளே விடவே மாட்டாங்கடான்னும் பேசிப்போம். சினிமாக்குள்ள வந்து ரொம்ப நாளைக்குப் பிறகுதான் பைவ் ஸ்டார் ஹோட் டலுக்குள்ளே போனேன்.

முதன்முதலா பார்த்த பிளாக் அண்ட் வொயிட் டையனோரா டி.வி. மாலை நேரத்தில் தமிழ்ல வர்ற 2 மணி நேர நிகழ்ச்சிக்காக காத்திருந்த அனுபவம் மறக்கவே முடியாது. அந்தச் சேனல்ல யாரோ, எதைப் பத்தியோ பேசிட்டே இருப்பாங்க. ஆனா, கண் சிமிட்டாம அதை பார்த்துக்கிட்டே இருப் பேன்.

முதன்முதலா அம்மா, ஜோதிடர்கிட்ட எங்களுக்கு கைரேகை பார்க்கும்போது ‘‘ராஜுதான் ஃபாரீன் போவான்!’’ன்னு அவர் சொன்னார். என்னது… ராஜு பாரின் போகப் போறானான்னு எனக்கு பயங்கர ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, நான்தான் முதல்ல போனேன்னு நினைக் கிறேன். ஏன்னா, ராஜுவுக்கு முன்னாடி நான் சினிமாவுக்கு வந்துட்டேன். என்னோட அப்பா கூட வெளிநாட்டுக்குப் போய் அதிக பாட்டுங்க ஒர்க் பண்ணி னதே இல்லை. எப்பவாவது போய்ட்டு வருவாங்க. அப்படி போறாருன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே குஷியாடுவோம். தூக்கமே வராது. ஏன்னா, சாக்லேட் வாங்கிட்டு வரு வாரேன்னுதான்.

நான் எப்பவுமோ தங்கம் மேல பெரிய அளவு பிரியம் வைக்கிறதில்லை. ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வேலை பார்த்த எல்லாருக்கும் அப்போ ஒரு தங்க மோதிரம் போட்டு விட்டாங்க. விரல் டைட்டாகிற வரைக்கும் போட்டிருந் தேன். குறிப்பிட்ட வயசுக்கு மேல அதை போட்டுக்க முடியலை. அப்பறம், ‘கூலி நம்பர் 1’ தெலுங்கு படத்துல மாஸ்டரா வேலை பார்க்கும்போது ஒரு தங்க மோதிரம் வந்துச்சு. அது எனக்கு ரொம்ப முக்கியமான மோதிரம். அவ்வளவு என்ன முக்கியம்? அதை அடுத்த வாரம் சொல்றேனே..!

எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

- இன்னும் சொல்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x