Published : 15 Dec 2022 08:38 PM
Last Updated : 15 Dec 2022 08:38 PM

“ஓடிடிக்காக படங்களை உருவாக்குவது சினிமாவை அழித்துவிடும்” - அடூர் கோபாலகிருஷ்ணன் ஆதங்கம்

அடூர் கோபாலகிருஷ்ணன்

“ஓடிடி தளங்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்கள், சினிமாவை அழித்துவிடும்” என்று இந்தியத் திரையுலகின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவரான மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், “செல்போன் மற்றும் லேப்டாப்பில் பார்ப்பதற்காக எனது படங்களை வெளியிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஒடிடியில் நான் படங்களைப் பார்ப்பதில்லை. திரைப்படங்கள் திரையரங்குகளின் காட்சி அனுபவத்திற்காக உருவாக்கப்படுகின்றன. அதை எப்படி சுருக்கி சிறிய திரையில் காட்ட முடியும்? சினிமா என்பது இருண்ட திரையரங்கில் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு சமூக அனுபவம். தொலைகாட்சியே கூட ஒரு சமரசம்தான். திரையரங்குகளில் பலமுறை ஓடிய படங்களைத்தான் தூர்தஷ்னில் வெளியிட்டிருந்தோம். இவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். உண்மையில் திரைப்படங்களுக்கான நோக்கம் இதுவல்ல. இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக உருவாக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும்.

கரோனா நம்மை இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள் வைத்திருந்தது. இது வீட்டிலிருந்தே படம் பார்க்கும் இடத்திற்கு நம்மை தள்ளியிருக்கிறது. ஆனால், சினிமா உயிர்ப்பித்திருக்க வேண்டுமென்றால், அது சின்னத்திரையை நம்பியிருக்கக் கூடாது. இன்று ஹாலிவுட்டும் கூட இந்தச் சூழல் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் ரயில்களில் வடக்கே பயணம் செய்யும்போது, ஓடும் ரயிலில் பருப்பு மற்றும் வேர்க்கடலை விற்கும் வியாபாரிகளைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அதை ‘டைம்பாஸ்’ என்று அழைக்கிறார்கள். நீண்ட பயணத்தின்போது நேரத்தைக் கொல்லும் விதமாக அவர்கள் உணவுப் பொருளை விற்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அப்படி நீங்கள் சினிமாவை டைம்பாஸ் என்று நினைக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து சென்சார்ஷிப் குறித்து பேசிய அவர், “நாம் தற்போது சூப்பர் சென்சார் நாட்களில் நாம் வாழ்கிறோம். முதலில் திரைப்படங்கள் அரசாங்க அதிகாரியால் தணிக்கை செய்யப்படுகின்றன. பின்னர் சமூக ஊடகங்களில் கண்ணுக்குத் தெரியாத சிலரால் சென்சார் செய்யப்படுகின்றன. இது நகைப்புக்குரியது. ஒரு திரைப்படத்தின் தன்மையை தீர்மானிக்க இவர்கள் யார்? என்னைப் பொறுத்தவரை இவர்கள் சமூக விரோதிகள். உங்களால் ஒரு கலைஞனை நம்ப முடியவில்லை என்றால், இங்கியிருக்கும் சூழல் சரியில்லை என்று அர்த்தம். பிரசாரம் ஒன்றும் சினிமாவுக்கு புதிதல்ல. போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் அதை மிகவும் சாதகமான முறையில் செய்தது.

நான் என் ஸ்கிரிப்டின் வசனங்களில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள நடிகர்களை அனுமதிப்பதில்லை. படப்பிடிப்பின்போது குறிப்பிட்ட காட்சியில் சில மாற்றங்களை நான் அரங்கேற்றுவேன். என்னுடைய ஸ்கிரிப்ட் மிகவும் ஆர்கானிக். அது மாறலாம், வளரலாம்” என்றார்.

‘உங்கள் படங்களின் காலதாமதத்திற்கு என்ன காரணம்?’ என கேட்டபோது, “ஒரு கதைக்குள் நுழைய எனக்கு காலம் தேவைப்படும். என்னால் நிறைய படங்களை உருவாக்கிட முடியும். ஆனால், ஒரு கதை என்னை தொந்தரவு செய்யும்போதுதான் நான் அதைப் படமாக்குவேன். இடையில் திரைப்படங்கள் குறித்து யோசிக்காத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்றார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x