Published : 11 Jul 2014 12:45 PM
Last Updated : 11 Jul 2014 12:45 PM

பழம்பெரும் பாலிவுட் நடிகை ஜோரா சேகல் காலமானார்

'தளபதி', 'உயிரே' படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமான பழம்பெரும் பழம்பெரும் நடிகை ஜோரா சேகல் காலமானார். அவருக்கு வயது 102.

மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இறந்ததாக, வரலாற்று பதிவர் இர்ஃபான் ஹபிப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஜோரா சேகலின் மறைவுக்கு அமிதாப் பச்சன், இயக்குனர் கரன் ஜோஹர், இயக்குனர் மதூர் பந்தர்க்கர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜோரா சேகலின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிறைவான முழு வாழ்க்கையை, சேகல் வாழ்ந்துள்ளார். தலைமுறைகள் கடந்து அவரது கலைச் சேவை போற்றப்படும். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியா இழப்பு" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

1912-ஆம் ஆண்டு பிறந்த ஜோரா சேகல், நடன இயக்குனர் உதய் ஷங்கரின் குழுவில் நடனக் கலைஞராக 1935-ஆம் ஆண்டு முதல் 1943-ஆம் ஆண்டுவரை இடம்பெற்றார். உலக அளவில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் முன்னணி நடனக் குழுவில் அவர் பங்கேற்றவர்.

அதன்பின், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அவர், தொடர்ந்து இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர்.

டெல்லியில் தனது மகளோடு வாழ்ந்து வந்த அவர், கடந்த 2007ஆம் ஆண்டு வரை இந்தி படங்களில் நடித்தார். தனது கலைச் சேவைக்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர்.

தமிழில் 'தளபதி', 'உயிரே' ஆகிய படங்களில் நடித்த அவர், இறுதியாக 'பாஜி ஆன் தி பீச்', 'ஹம் தில் தே சுக்கே சனம்' ஆகிய அவரது இந்தி படங்கள் கடந்த 2007-ஆம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x