Last Updated : 29 Dec, 2016 10:49 AM

 

Published : 29 Dec 2016 10:49 AM
Last Updated : 29 Dec 2016 10:49 AM

பெரிய ஹீரோக்களின் படங்களுக்குதான் தியேட்டர்கள் முன்னுரிமை தருகின்றன: தயாரிப்பாளர் வி.வினோத்குமார் நேர்காணல்

“முதல் இரண்டு படங்களில் சினிமா என்றால் என்ன? ஒரு படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற அனுபவம் கிடைத்தது. இப்போது வெளிவரும் 3-வது படம், ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வைத்தது” என்கிறார், டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் வழியே ‘அச்சமின்றி’ படத்தை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் வி.வினோத்குமார்.

விஜய் வசந்த் நடிப்பில் வெளியான ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’, ‘என் னமோ நடக்குது’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நாளை வெளிவரும் ‘அச்சமின்றி’ படத்தை தயாரித்திருக்கிறார், வினோத்குமார். இவர் வசந்த் அன் கோ உரிமையாளர் எச்.வசந்தகுமாரின் 2-வது மகன். அவரிடம் பேசியதிலிருந்து..

‘அச்சமின்றி’ திரைப்படம் கல்வித்துறை சார்ந்த களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறதாமே?

இன்றைய சூழ்நிலையில் கல்வியில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படம் இது. எப்படி ‘என்னமோ நடக்குது’ படத்தில் வங்கிகள் சார்ந்த தவறுகளைத் துணிச்சலோடு சொன்னோமோ, அதேபோல் தனியார் மற்றும் அரசு கல்வி சார்ந்த சூழ்நிலையை இப்படத்தில் முன்வைத் திருக்கிறோம். இது சமூக அக்கறை மிகுந்த படமாக உருவாகியுள்ளதில் சந்தோஷமாக இருக்கிறது. அரசுப் பள்ளி களை ஏன் மக்கள் விரும்புவதில்லை என்பதற்கு வலுவான காரணங்களைச் சமூக சிந்தனையோடு படத்தில் கூறியுள்ளோம்.

இதில் விஜய் வசந்துக்கும், சமுத்திர கனிக்கும் என்ன வேலை?

அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? மாணவ, மாணவிகளைச் சேர்ப்பதில் நடப்பது என்ன என்பதையெல்லாம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம். விஜய் வசந்த், சமுத்திரகனி அண்ணன், நாயகி ஸ்ருஷ்டி மூவரும் தனித்தனியே எதிர்கொள்ளும் பிரச்சினைதான் களம். ‘என்னமோ நடக்குது’ படம் மாதிரி கமர்ஷியல் கலந்து சஸ்பென்ஸ் திரில்லராக கதை நகரும்.

புதிய தயாரிப்பாளர்கள் எளிதாக பயணிக்கும் வகையில் திரைப்படத்துறை இருக்கிறதா?

படத்தை எடுப்பதைவிட அதை சரியான சூழலில் வெளியிடும் கலை இங்கே முக்கியம். பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணினால்தான் இங்கே எந்தவிதமான தடைகளும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது. தியேட்டர்களும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்குத்தான் முன்னுரிமை தருகின்றன. இந்த சூழ்நிலை மாறினால் தான் சினிமாத்துறை ஆரோக்கியமான தாக மாறும்.

ஒரு மகன் நடிகர், இன்னொரு மகன் தயாரிப்பாளர்.. பிசினஸில் கவனம் செலுத்துவது குறித்து அப்பா வசந்தகுமார் எதுவுமே சொல்லவில்லையா?

சினிமா வேலைகள் இல்லாத நேரம் முழுக்க என்னையும் அண்ணன் விஜய் வசந்தையும் ஆபீசில் பார்க்கலாம். சினிமாவில் இறங்கி வேலை பார்ப்பதையும் ஒரு பிசினஸாகத்தான் நினைத்து வேலை பார்க்கிறோம். அப்பாவின் சம்மதமும், ஆலோசனையும் இல்லாமல் நாங்கள் எதையும் தொடுவதில்லை. நாங்கள் சிறப்பாகவே இந்த வேலையை செய்து வருவதாக அப்பா நினைக்கிறார்.

டைரக்‌ஷனில் இறங்கப்போகிறீர் களாமே?

எனக்கு கதை, திரைக்கதை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. விரைவில் அந்த வேலையில் இறங்கப்போகிறேன். நடிக்கணும்னு கொஞ்சம்கூட தோன்றிய தில்லை. கதை எழுதியதும் டைரக்‌ஷன் பற்றி யோசிக்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் தயாரிப்பாளர் பணி நிறைவாக இருக்கிறதா?

நல்ல படம் எடுப்பது காலகாலத் துக்கும் சொத்து மாதிரி. சின்ன தயாரிப் பாளராக இருக்கும்போதே நல்ல படங்கள் எடுத்துவிட்டோம் என்ற நிறைவு இருக்கிறது. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்கள், முன்னணி இயக்குநர்களை வைத்து படம் பண்ணும் வேலைகள் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x