Last Updated : 05 Jul, 2014 03:58 PM

 

Published : 05 Jul 2014 03:58 PM
Last Updated : 05 Jul 2014 03:58 PM

300 கிலோ எடை கொண்ட ‘நானோ’ டிராக்டர் உருவாக்கம்- நாகை கல்லூரி மாணவர்கள் சாதனை

விவசாயத்துக்கு பயன்படும் வகையில் 300 கிலோ எடை கொண்ட டிராக்டர் மாதிரி ஒன்றை நாகப்பட்டினத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். நாகப்பட்டினத்தில் உள்ள இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் இறுதியாண்டு மாணவர்கள் ஷேக் அமினுதீன், சதாம் நாசிப், விக்னேஷ் ஆகியோர் தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த நானோ டிராக்டரை உருவாக்கியுள்ளனர்.

ஒரு பெரிய டிராக்டரைப் போலவே அச்சு அசலாக இந்த நானோ டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னால் இரு பெரிய சக்கரங்கள், முன்னால் இரு சிறிய சக்கரங்கள், 110 சிசி திறன் உள்ள மோட்டார், கியர் பாக்ஸ், நான்கு கியர்கள் என்று இயங்கத்தக்க கருவிகளுடன் விவசாயத்துக்குப் பயன்படும் வகையிலான கருவிகளையும் இணைத்துள்ளனர். வயலில் உழவு செய்ய தேவையான கேஜ்வீல் மற்றும் கல்டிவேட்டர் என்று சொல்லப்படும் கருவிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாணவர் ஷேக் அமினுதீன் ‘தி இந்து’விடம் கூறியது: தற்கால சூழலில் விவசாயம் அழிந்துவரும் நிலையில் இருக்கிறது. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்ததன் அடிப்படையில் இந்த குட்டி டிராக்டரை உருவாக்கியுள்ளோம். இன்றைய நிலையில் டிராக்டரின் விலை தோராயமாக ரூ.6 லட்சம் ஆகும். எடையளவு 1.5 முதல் 2 டன் வரை.

இதை விவசாயிகள் எல்லோராலும் சொந்தமாக வாங்கி உழவு செய்ய முடியாது. அதனால் டிராக்டர் வைத்துள்ள விவசாயிகளை முழுவதுமாக நம்பித்தான் டிராக்டர் இல்லாத சிறிய விவசாயிகள் உழவும் விவசாயமும் செய்ய முடிகிறது. பக்கத்து வயலில் உழவு செய்து நட்டுவிட்டால் தங்கள் வயலுக்கு செல்ல வழியில்லாத, அதற்கு அடுத்த வயல்காரர்கள் விவசாயம் செய்ய முடியாமல் போய்விடும் அவலமும் தற்போது தொடர்கிறது. அந்த நிலையைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த நானோ டிராக்டரை உருவாக்கியுள்ளோம்.

வெறும் 300 கிலோ எடை கொண்ட இதனை வரப்பில் ஓட்டிப்போய் அவரவர் வயலில் இறக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு விவசாயி எப்போது வேண்டுமானாலும் தன் வயலை உழுதுகொள்ள முடியும்” என்றார் அவர். இந்த டிராக்டர் மாதிரியை உருவாக்க மொத்தம் ரூ.30 ஆயிரம் மட்டுமே மாணவர்களுக்கு செலவானதாம். கேஜ்வீலை கிளிப் முறையில் எளிதாக இணைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

குறைந்த எடை கொண்டதால் எரிபொருள் செலவும் குறையுமாம். சாதாரணமாக டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு மூன்றரை லிட்டர் டீசல் எரிபொருளாகத் தேவைப்படும். ஆனால் தாங்கள் உருவாக்கியுள்ள இந்த நானோ டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒன்றரை லிட்டர் பெட்ரோல் போதும் என்கின்றனர் இந்த இளம் விஞ்ஞானிகள்.

இந்த நானோ டிராக்டரை இன்னும் கொஞ்சம் செலவு செய்து, மேலும் சில தொழில்நுட்பங்களைச் சேர்த்து மெருகேற்றினால் அதை விவசாயத்துக்கு பல வகைகளில் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பது மாணவர்களின் நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x