Published : 28 Nov 2022 06:54 PM
Last Updated : 28 Nov 2022 06:54 PM

ஜெய்பீம் வார்த்தையல்ல... அது ஓர் உணர்வு: கோவா சர்வதேச பட விழாவில் ஞானவேல் பேச்சு

‘ஜெய்பீம் வார்த்தையல்ல; அது ஓர் உணர்வு’ என கோவை - இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ஞானவேல் பேசினார்.

கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் ஞானவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ‘ஜெய்பீம்’ படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கிடைத்த கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக சுருக்கப்பட்டுள்ளார்.

‘ஜெய்பீம்’ படத்திற்காக சாதிப் பாகுபாடு, சட்ட அமலாக்கம் மற்றும் நீதிபரிபாலனத்தில் உள்ள குறைகள் பற்றி பல நூற்றுக்கணக்கான கதைகளை கேட்டேன். அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம். அதையே தான் படத்தில் சித்தரித்துள்ளேன்.

ராஜாக்கண்ணு, செங்கேணி என்ற பழங்குடியின தம்பதிகள், உயர் சாதியினரால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதை படம் எடுத்துக் காட்டுகிறது. செய்யாத குற்றத்திற்காக ராஜாக்கண்ணு, கைது செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை பிரதிபலிக்கிறது.

கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும்” என்று அவர் தெரிவித்தார். இந்தப் பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x