Published : 13 Nov 2022 12:38 PM
Last Updated : 13 Nov 2022 12:38 PM

'80ஸ் ரீயூனியன்': கரோனாவுக்குப் பிறகு ஒன்றுகூடிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள்

மும்பை: எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பையில் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

1980களில் திரைவானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வந்தனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை.

இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து தங்கள் விருந்தினர்களை வரவேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு இந்நிகழ்ச்சியில் முக்கிய இடம் இருந்தது .

விடியற்காலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைப்படைப்பு ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார். நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக ரீயூனியன் அமைந்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x