Published : 06 Nov 2022 05:38 AM
Last Updated : 06 Nov 2022 05:38 AM

லவ் டுடே: திரை விமர்சனம்

ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்), நிகிதாவும் (இவனா) காதலிக்கிறார்கள். ‘உன்னை எனக்கு நல்லாத் தெரியும்’ என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள், இருவரும். காதல் விவகாரம் நிகிதாவின் அப்பா வேணு சாஸ்திரிக்கு (சத்யராஜ்) தெரியவர, அவர் உத்தமனை அழைத்துப் பேசுகிறார். இருவரும் தங்கள் ஃபோனை ஒரே ஒரு நாள் மாற்றிக்கொள்ள வேண்டும், பிறகு சுமூகமாக எல்லாம் சென்றால் திருமணம் என நிபந்தனை விதிக்கிறார். அதன்படி மாற்றிக்கொள்கிறார்கள். இருவர் ஃபோனுக்குள்ளும் இருந்து பூதமாகக் கிளம்புகிறது, அவரவர் ரகசியங்கள். அது பெரும் மோதலாகிவிட, இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படம்.

அத்தியாவசியமாகிவிட்ட செல்ஃபோன்தான் பல அனாவசியங்களையும் அள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அதனால் ஏற்படும் அக்கப்போர்கள், வாழ்க்கையில் உண்டாக்கும் அராஜகங்களையும் ஆர்ப்பாட்டமில்லாத காட்சிகளின் மூலம் ரசனையாகச் சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். ‘மாடர்ன் டே’ காதலையும் நம்பிக்கையற்றுத் தடுமாறும் சந்தேகத்தையும் ஆழமாகவே பேசியிருக்கிறது, படம். அதற்குச் சுவாரசியமான, தெளிவான திரைக்கதையும் கதாபாத்திரத் தேர்வும் பலமாக உதவி இருக்கின்றன.

செல்ஃபோன்தான் ‘கான்செப்ட்’ என்பதால், அதன் உருவாக்கத்தில் தொடங்கும் ‘டைட்டில் கார்ட்’, மண்ணுக்குள் பூத்து வைக்கும் மாங்கொட்டை ‘இன்னும் வளரலையே’ என்று அடிக்கடிதோண்டி பார்க்கும் சிறுவன், அவனைப் போலவே வளர்ந்து கிளைமாக்ஸில் மரமாகி நின்று நம்பிக்கையைச் சொல்லும் விஷயத்தில், தன்னைத் தேர்ந்த இயக்குநராகவும் நிரூபித்திருக்கிறார், பிரதீப்.

‘கோமாளி’ மூலம் இயக்குநரான அவர், இதில் நாயகனாகவும் தன்னை வளர்த்திருக்கிறார். சில இடங்களில் தனுஷ் சாயல் தெரிந்தாலும், ‘இவர் வேற மாதிரி’ என புரிய வைத்து விடுகிறார் பல காட்சிகளில். காதலியின் தந்தை முன் பவ்யமாக அமர்ந்து பேசும்போது தெரிகிற கூச்சமும் தவிப்பும் பிறகு அதே காட்சி அவர் வீட்டில் ‘ரிபீட்’ ஆகும் போது வெளிக்காட்டும் தெனாவட்டும் மொத்தக் கவலையையும் அம்மாவிடம் கொட்டிக் கதறும்போதும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்பதை எளிதாக உணர்த்துகிறது அவர் நடிப்பு.

காதலி என்பதைத் தாண்டி, இன்றைய இளம் பெண்களின் பிரதிபலிப்பாக இவானா, கவனிக்க வைக்கிறார். காதலன் பற்றிய ரகசியங்கள் அறிந்து, எரிந்து விழும்போது அவர் நடிப்பில் அத்தனை யதார்த்தம்.

யோகிபாபுவை சரியான ‘மீட்டரில்’ பயன்படுத்தி இருப்பதும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ரவீனாவுக்கும் அவருக்குமானப் புரிதல் காட்சிகளும் தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையின் தீராத பலம். வாட்ஸ் அப் குரூப்புக்கு ‘கிளி வெர்சஸ் கிங்காங்’ என டைட்டில் வைத்து உருவக் கேலி செய்யும் மனநிலைக்கு அவர் காட்டும் ரியாக்‌ஷனும் விளக்கமும் சென்டிமென்டாகவும் அமைந்துவிடுகிறது.

நாயகியின் கட்டுப்பாடான ‘ஆர்தோடக்ஸ்’ அப்பா சத்யராஜ், ‘எப்ப பாரு செல்போனு’ என்று செல்ல எரிச்சல் காட்டும் அம்மா ராதிகா உட்பட அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

காட்சிகளோடு ஒன்றிவிடச் செய்யும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், கிளைமாக்ஸில் சித் ஸ்ரீராம் குரலில் வரும், ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ பாடலும் படத்துக்கு மேலும் உயிர் கொடுக்கின்றன. தினேஷ் புருஷோத்தமனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, காட்சிகளை நின்று கவனிக்க வைக்கின்றன.

காமெடி என்ற பெயரில் வரும் சில ஆபாச வசனங்கள் மற்றும் ‘கிளிஷே’ காட்சிகளைத் தவிர்த்திருந்தாலும் ரசிக்கும் படமாகவே இருந்திருக்கும். மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனாலும் 2கே கிட்ஸ், தியேட்டரில் காண்பிக்கும் திருவிழா ‘மூடில்’ குறைகள் கரைந்து போகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x