Published : 26 Oct 2022 03:45 PM
Last Updated : 26 Oct 2022 03:45 PM

“மேக்கப் போட்டால் ‘ஹல்க்’ மாதிரி கோபம் வரும்...” - சுவாரஸ்யம் பகிர்ந்த கார்த்தி

''படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும்'' என நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

‘சர்தார்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ''ஒரே வருடங்களில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் நடிகர் கார்த்தி. அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார் மித்ரன்.

ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும்'' என்றார்.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது, “இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதை குறித்து சொல்லுல்போது, 'ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்' என்றார்.

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன்.

கார்த்தி, மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ''தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும்போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும்போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்'' என்றார்.

சர்தார் 2-ம் பாகம்: 'கைதி 2' படம் குறித்து சொல்லுங்கள் என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘கைதி 2 படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்கும்’ என கார்த்தி பதிலளித்தார். மேலும், ‘லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 67’ படத்தில் நடிப்பீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘அதில் நிறைய சிக்கல் உள்ளது. இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் வேறு வேறு என்பதால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை’ என்றார். இறுதியாக நிகழ்ச்சி முடியும்போது, ''சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது'' என கார்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x