Published : 29 Aug 2022 06:18 PM
Last Updated : 29 Aug 2022 06:18 PM

ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஓர் உடல்மொழி - ‘கோப்ரா’ சவால்கள் பகிரும் விக்ரம்

''ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழியுடன் நடிக்க வேண்டியிருந்ததால், அது எனக்கு சவாலானதாக இருந்தது'' என 'கோப்ரா' பட நடிப்பனுபவம் குறித்து நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்கான ப்ரமோஷனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய விக்ரம், ''இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தக் கதையை விவரிக்கும்போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர், இதனைக் கடந்துதான் நடித்தேன். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழியுடன் நடிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.

இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட் என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும்போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.

என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின்போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது.

தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்றபோது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால், திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்'' என்றார் விக்ரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x