Published : 29 Aug 2022 09:49 AM
Last Updated : 29 Aug 2022 09:49 AM

சினிமாவில் வியாழக்கிழமை டிரெண்ட் எப்படி இருக்கிறது?

திரைப்படங்களை வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதால்,சாதகமும் பாதகமும் நிறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் திரையுலகினர்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல், இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களிலும் புதிய பட ரிலீஸ் என்றால் அது வெள்ளிக்கிழமைதான். ரசிகர்கள், காலையிலேயே தியேட்டர் வாசலில் நின்று, முட்டி மோதி டிக்கெட் வாங்கி பரபரப்பாகப் படங்கள் பார்த்த காலங்கள் உண்டு. அவை நினைவுகளாகிவிட்டன.

பண்டிகை காலங்களில் மட்டுமே வெள்ளிக்கிழமை அல்லாத நாட்களில் படங்கள் வெளியாவது உண்டு. மற்றபடி எப்போதும் வெள்ளி வெளியீடு மட்டுமே. அஜித் நடித்த சில படங்கள், வியாழக்கிழமை ரிலீஸ் என்ற வழக்கத்தில் இருந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாக வியாழக்கிழமை ரிலீஸ் டிரெண்ட், சினிமாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 18-ம் தேதி வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, 25-ம் தேதி வெளியான விஜய்தேவரகொண்டாவின் ‘லைகர்’ வரை இந்த டிரெண்ட் தொடர்கிறது. அடுத்து வர இருக்கிற சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ உட்பட மேலும் சில படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கின்றன.

அப்படி ரிலீஸ் செய்தால் ஞாயிறுவரை நான்கு நாள் வீக்கென்ட் கணக்கில் வசூல் அள்ள தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நினைக்கிறார்கள். இந்த ஃபார்முலாவில் இப்போது ‘திருச்சிற்றம்பலம்’ வெற்றி பெற்றுள்ளதால், இந்த வியாழ கிழமை டிரெண்ட்டில் சிறிய படங்களும் இறங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, ‘‘இது பல வருடங்களாக நடக்கும் விஷயம்தான். பெரிய நடிகர்களின், எதிர்பார்ப்புள்ள படங்களை வியாழக்கிழமை ரிலீஸ் செய்வது வெற்றிகரமாகவே இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் இது நடைமுறையாகவே ஆகிவிட்டது. அங்குவியாழக்கிழமை, ரசிகர்களுக்கான காட்சியாக இருக்கிறது.

முதல் நாளிலேயே படம் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் வியாழன் வருவார்கள். வழக்கமான பார்வையாளர்கள், வெள்ளி, சனி, ஞாயிறு வருகிறார்கள்’’ என்கிறார்.

ஆனால், இதில் பயங்கர அச்சுறுத்தலும் இருக்கிறது என்கிறார்கள். இன்றைக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் படம் பார்த்தவாறே, காட்சிக்கு காட்சி விமர்சனம் செய்யும் போக்கு இருக்கிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தால், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கிடைக்கும் வசூல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

‘‘இது உண்மைதான். ’லைகர்’ படமே இதற்கு சாட்சி. வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களால் வெள்ளி, சனிக்கிழமைகளில் வசூலில் பாதிப்பைச் சந்தித்துள்ளது. படம் நன்றாக இருந்தால் பிரச்னை இல்லை. சரியில்லை என்றால் பாதிப்பைத் தவிர்க்க முடியாது. இதில் பிளஸ், மைனஸ் இரண்டுமே இருக்கிறது’’ என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x