Published : 22 Aug 2022 01:35 PM
Last Updated : 22 Aug 2022 01:35 PM

சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை

''திரைப்படத் துறையில் ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக சகோதரர் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும்'' என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தன் பிறந்த நாளையொட்டி, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றை கட்டுவதாக அறிவித்துள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுவதாகவும், அடுத்த ஆண்டு தனது பிறந்த நாள் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

ஹைதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கு, தெலுங்கு கிரிக்கெட் சங்கம் 20 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவமனை கட்ட இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி தருவதாக இசையமைப்பாளர் தமன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சிரஞ்சீவி, ''நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி செலவானாலும் இதை கட்டிமுடிப்பேன்” என்கிறார்.

இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவாதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் துறையில் ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x