Last Updated : 10 Oct, 2016 03:35 PM

 

Published : 10 Oct 2016 03:35 PM
Last Updated : 10 Oct 2016 03:35 PM

அஜித்தைப் பற்றி சிம்புவின் பதில்: சர்ச்சையும் விளக்கமும்

அஜித்தைப் பற்றி சிம்பு கூறிய பதிலால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை உண்டானது. அதற்கு சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

அக்டோபர் 9ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்கில் இணைந்தார் சிம்பு, அதனைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது "’அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களில் அஜித்தை பற்றிய காட்சிகள் இருக்கிறதா? ரசிகர்கள் காத்திருக்கிறோம்" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிம்பு "அஜித் சாரை பற்றி யாருமே பேசாத போது, அவருடைய தோல்வியடைந்த படத்தின் கட்-அவுட்டை வைத்து 'தல' என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்தது மட்டுமன்றி அனைவருமே அவரை பெயரை உபயோகித்து வருகிறார்கள். இனிமேல் அதைப் போன்று நான் செய்ய மாட்டேன். அஜித் சாரின் வளர்ச்சியால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிலளித்தார்.

சிம்புவின் இந்த பதில், அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து Periscopeலும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இச்சர்ச்சையைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சிம்பு "'மன்மதன்', 'சிலம்பாட்டம்' உள்ளிட்ட எனது படங்களில் அஜித் சாரின் படத்தோட காட்சியோ, வசனமோ ஏதாவது ஒன்று இடம்பெறும். அப்போது என்னை யாருமே கேள்விக் கேட்கவில்லை. இப்போது அஜித் சார் பெரிய இடத்துக்குச் சென்றவுடன், நீங்கள் ஏன் அவருடைய பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நான் சொன்னதை தவறாக புரிந்துக் கொண்டீர்கள். அஜித் சார் அந்த காலத்தில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கினார். அப்போது அவரை 'தல' என்று தூக்கி வைத்துக் கொண்டாடாத நேரத்திலேயே, அவருடைய பெயரை நாம் சொல்ல வேண்டும் என்று நினைத்துச் சொன்னவன் நான்.

முதலில் நான் ரஜினி சாருடைய ரசிகன். என்னுடைய தலைமுறையில் அடுத்து அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். நான் படங்களில் அஜித் சார் பெயரைச் சொன்னவுடன் அவரும், ஷாலினி மேடமும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். "நீங்க பண்ணியது பெரிய விஷயம்" என்று அஜித் சார் சொன்ன போது "எனக்கு நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று தெரியும் சார், அன்றைக்கு அனைவருமே உங்கள் பெயரைச் சொல்வார்கள். முதலில் நான் சொன்னதாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்" என்றேன்.

அஜித் சாரை தூக்கிவிட நான் யார்? அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது. அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததால் மட்டுமே, முன்பே எனது படங்களில் அவருடைய கட்-அவுட்டை வைத்து கத்தினேன். அனைவருமே அவருடைய பெயரை உபயோகிக்கும் போது, நானும் உபயோகித்தால் அவருடைய பெயரை வைத்து நான் பெரிய ஆளாக நினைப்பதாக சொல்வது காமெடியாக இருக்கிறது. இன்று பலரும் அவருடைய பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார். அதனால் நான் அவருடைய பெயரை உபயோகிக்க மாட்டேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

ஏன் அஜித் சார் பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்ட போது கூட "சார்.. எனக்கு பிடித்த விஷயத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பது போன்று இருக்கிறது" என்று பதிலளித்தேன். நான் சொல்ல வந்த விஷயத்தை தவறாக புரிந்துக் கொண்டு காமெடி பண்ணுபவர்களைப் பற்றி கவலையில்லை. இது தான் என்னுடைய நிலை.

3 வருடங்களாக எனக்கு படங்கள் வரவில்லை. அனைத்து நாயகர்களை விட கீழே கேவலமான நாயகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். யாருடைய உறுதுணையும் எதிர்பார்த்து நான் திரையுலகுக்கு வரவில்லை. எனக்கு எம்ஜி.ஆர், ரஜினி, அஜித் மூவரையும் பிடிக்கும். நான் அவர்களுடைய ரசிகன் என்று சொல்வதால் உங்களுக்கு பிரச்சினை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

எனக்கு உறுதுணையாக என்னுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள். 10 பேர், 2 பேர் கூட இல்லாமல் மற்ற நாயகர்களோடு ஒப்பிடும் போது நான் அந்த இடத்தில் இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை. மேலே இருக்கும் போது கீழே விழுந்துவிடக்கூடாதே என்று பயப்பட வேண்டும். கீழே இருக்கும் போது வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒருவருக்காக என்றைக்குமே உண்மையாக நிற்பேனே தவிர, இன்றைக்கு ஒன்று பேசி, நாளைக்கு ஒன்று பேசும் ஆள் சிலம்பரசன் கிடையாது. " என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x