Last Updated : 04 Oct, 2016 06:48 PM

 

Published : 04 Oct 2016 06:48 PM
Last Updated : 04 Oct 2016 06:48 PM

சைத்தான் பாடல் சர்ச்சை வரிகள் மாற்றம்: விஜய் ஆண்டனி அறிவிப்பு

'சைத்தான்' டீஸரில் சர்ச்சைக்குள்ளான வரிகளை மாற்றம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. பிரதீப் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதன் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது.

டீஸரில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், சமஸ்கிருத மந்திரத்தை ஒட்டியிருப்பதாக சர்ச்சையானது. இதனால், இப்படத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இச்சர்ச்சை குறித்து விஜய் ஆண்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'சைத்தான்' படத்தின் டீஸர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால், சிலர் மனவருத்தத்துக்கு உள்ளானதை நான் அறிந்தேன்.

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது Youtube, Facebook மற்றும் Twitter பக்கங்களில் இன்று நீங்கள் 'சைத்தான்' படத்தின் டீஸரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை புதிய டீஸரை வெளியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x