Published : 29 Jul 2022 03:28 PM
Last Updated : 29 Jul 2022 03:28 PM

“என் உதவி இயக்குநர் ஸ்விக்கி ஓட்டினார்” - இயக்குநர் ஸ்ரீகணேஷ் உருக்கம்

''குருதி ஆட்டம் தாமதமான காலத்தில் எனது உதவி இயக்குநர் ஸ்விக்கியில் பணிபுரிந்தார்” என்று இயக்குநர் ஸ்ரீகணேஷ் உருக்கமாக கூறினார்.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் '8 தோட்டாக்கள்' படப் புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குருதி ஆட்டம்'. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஸ்ரீகணேஷ், ''8 தோட்டாக்கள் வந்தபோது அதர்வாவுடன் பேச ஆரம்பித்தோம். எந்தப் படத்தில் இருந்தாலும், என் படத்திற்காக நேரம் ஒதுக்கி வந்து நடித்து கொடுப்பார் அதர்வா. கதை சொல்லும்போது, முதல் பாதியை கேட்டதும் அவர் என்னை கட்டியணைத்து, 'என் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டீர்கள்'' என்றார். இரண்டாம் பாதியை கேளுங்க என்று சொன்னபோது, 'எனக்கு முதல் பாதியை ஹேப்பி. நீங்க மத்த வேலையை தொடங்குங்க' என்றார். ஒளிப்பதிவாளர் தினேஷ், எடிட்டர் அனில் ஆகியோருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்தப் படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும்'' என்றார்.

தொடர்ந்து தனது உதவி இயக்குநர்களை மேடையேற்றியவர், ''படம் நடுவில் கொஞ்சம் கால தாமதமாகும்போது, 'நீங்க வேற படம் கிடைச்சா கூட போய் பண்ணுங்க' என்றேன். இதில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு, ஸ்விக்கி ஓட்டிக்கொண்டிருந்தார். 'நீங்க எப்போ படம் ஆரம்பிச்சாலும் நான் வந்துட்றேன்'' என்றார்” என்று சொல்லும்போதே உடைந்து கண்ணீர்விட்டார்.

தொடர்ந்து பேசியவர், “மற்ற உதவி இயக்குநர்களும் அப்படித்தான். எந்தப் படத்தில் வேலை செய்தாலும், இங்கே வந்துவிடுவார்கள். இந்தப் படம் மூலமாக இவர்களுக்கு புதிய பாதை உண்டாகும் என நம்புகிறேன்.

மிஷ்கின் பேச்சு: இந்நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ''ஒருமுறை வந்து என்னிடம் 'உதவி இயக்குநர்' ஆக வேண்டும் என ஸ்ரீகணேஷ் வந்தார். அப்பா என்ன செய்கிறார் எனக் கேட்டேன், 'அப்பா இல்லை சார்' என்றார். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகம். என்னுடைய முக்கியப் படமான 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் பணியாற்றினார். எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். நல்ல படம் செய்ய வேண்டும் என நினைக்கும் ஒருவர். 'சோதனையிலிருந்து தான் ஒரு கிரியேட்டர் வெளியே வருவான்' என எப்போதும் கூறுவேன்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியம் மட்டுமல்ல. அது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஊடகமும் கூட. தனஞ்செயன் என்னிடம், 'உங்க உதவியாளர்கள் நல்ல சினிமாவை கொடுக்கிறார்கள்' என்றார். என் உதவியாளர்கள் எப்போதும் நல்ல படத்தை மட்டுமே கொடுப்பார்கள். யார் அப்படி செய்யவில்லையோ அவர் என் உதவியாளரே கிடையாது. 'பிசாசு' படத்தில் நடிக்க அதர்வாவை கேட்டேன். அவர் அப்போது பிஸியாக இருந்தார். பண்ண முடியவில்லை. ஸ்விக்கி ஓட்டியதாக கூறிய உதவி இயக்குநர் நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்'' என்றார்.

இந்தத் திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும்'' என்றார்.

நடிகர் அதர்வா, ''ஶ்ரீகணேஷ் இந்தக் கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஶ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்தக் கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்'' என்றார். இப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x