Published : 30 May 2022 10:00 AM
Last Updated : 30 May 2022 10:00 AM

திரை விமர்சனம்: வாய்தா

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அன்றாடம் உழைத்து ஜீவனம் நடத்துகிறார் ஏழைசலவைத் தொழிலாளி அப்புசாமி(‘கேடி என்கிற கருப்புத்துரை’ படத்தில் நடித்து வரவேற்பை பெற்ற நாடகத் துறை பேராசிரியர் மு.ராமசாமி). இருசக்கர வாகனங்களில் எதிரெதிர் திசையில் வரும் 2 பேரின் பொறுப்பின்மையால் அவர் விபத்துக்குள்ளாகிறார்.

இஸ்திரிபெட்டியை தூக்கி வேலை செய்யவேண்டிய அவரது வலது கை எலும்புமுறிந்துவிடுகிறது. விபத்துக்கு காரணமான இரு தரப்பினரும், அப்புசாமிக்கு இழப்பீடு கொடுப்பதுபோல கட்டப்பஞ்சாயத்து செய்து, காலம் கடத்துகின்றனர். உள்ளூர் அரசியல், சாதியப் பாகுபாடு என பல காரணங்களால் பஞ்சாயத்து தீராமல் போக,அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஒரு வழக்கறிஞர், வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்கிறார். அதன்பின்னர், வாய்தாக்களால் விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. கடைசியில் அப்புசாமிக்கு எப்படிப்பட்ட நீதி கிடைத்தது என்பதுதான் கதை.

சாதியப் பாகுபாடுகள், உள்ளூர் அரசியல், சில வழக்கறிஞர்களின் ‘தொழில்நேர்மை’, வாய்தாக்களால் தாமதப்படுத்தப்படும் நீதி ஆகியவற்றை பேச முயன்றிருக்கிறது திரைப்படம். குறிப்பாக, நீதித் துறையில் நேர்மை தவறும் சிலர் குறித்த வெளிப்படையான விமர்சனத்தை துணிந்து பேசியதற்காகவே இப்படத்தின் இயக்குநர் மகிவர்மனை பாராட்டலாம்.

அப்புசாமியின் மகனுக்கும், ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையிலான காதல் எபிசோட், திரைக்கதைக்குள் தேவையற்ற திணிப்பாகவும், மையக் கதையின் நகர்வுக்கு வேகத் தடையாகவும் இருக்கிறது.

சலவைத் தொழிலாளி எவ்வளவு வயதானவராக இருந்தாலும், இளையவர்கள் அவரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பது, கிராம வழக்கம் என்ற பெயரில் அவர்களுக்குரிய கூலியை உடனடியாக கொடுக்காமல் விடுவது என சாதி அடுக்கில் புரையோடிய வன்மம் பளிச்சென்று பதிவாகியிருக்கிறது.

மு.ராமசாமி இதில் அப்புசாமியாக வாழ்ந்திருக்கிறார். அவரது மகனாக வரும் புகழ் மகேந்திரன், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து,முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பைக் கொடுக்கிறார். சில காட்சிகளில் வரும் நாசரின் பங்களிப்பு மையக் கதையாடலுக்கு முட்டுக்கொடுக்கிறது.

துணை கதாபாத்திரங்களில் ஒருசிலர் மட்டுமே மனதில் தங்குகின்றனர். பெரும்பாலான காட்சிகளின் ‘நாடகத்தன்மை’யில் அழுத்தம் ஏதும் இல்லாததால் அவை ஈர்க்கத் தவறுகின்றன. ‘எடிட்டிங்’ பணி இப்படத்தில் நடந்ததா என்றே தெரியவில்லை.

இந்த குறைகளை தாண்டி, நீதி அமைப்புகள் வரை புரையோடிப்போன சாதிய மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வகையில், இது துணிச்சலான ‘வாய்தா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x