Published : 28 Mar 2022 01:41 PM
Last Updated : 28 Mar 2022 01:41 PM

கோலிவுட் அப்டேட்ஸ்: 16 ஆண்டுகளுக்கு பிறகு லைலா | போலீஸ் அகாடமி கதை

16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் லைலா

தமிழில் பல படங்களில் நாயகியாக நடித்த லைலா கடந்த 2006-ல் ‘திருப்பதி’என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். பிறகு, மெஹ்தின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகுலைலா மீண்டும் நடிக்க வருகிறார். கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். நாயகிகளாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமண் குமார் தயாரிக்கிறார்.

மே மாதம் ஆதி - நிக்கி திருமணம்

தமிழில் ‘மிருகம்’, ‘ஈரம்’, ‘மரகத நாணயம்’ மற்றும் பல தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆதி பினிசெட்டி. இவரும், நடிகை நிக்கி கல்ராணியும் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கியதாக கூறப்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து சினிமா விழாக்களுக்கு சென்று வந்தனர். ஆனால், இருவரும் காதலிப்பதாக வந்த செய்திகள் பற்றி தொடர்ந்து மவுனம் காத்து வந்தனர்.

இந்நிலையில், நிக்கி கல்ராணி வீட்டில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை அறிவித்துள்ள இருவரும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் திருமணம் மே மாதத்தில் சென்னையில் நடக்க உள்ளது.நிச்சயதார்த்தத்தில் ஆதி - நிக்கி கல்ராணி

விஜய் மில்டனின் தொடர்

விஜய் ஆன்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் ‘பைரகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ள விஜய் மில்டன், வெப் தொடருக்கு வந்திருக்கிறார். இவர் இயக்கும் வெப் தொடருக்கு ‘கோலி 1.5 சோடா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். ‘கோலிசோடா’, ‘கோலிசோடா 2’ ஆகிய படங்களுக்கு இடையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இத்தொடர் உருவாகிறது, கோயம்பேடு மார்க்கெட்டில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

சைக்கோ த்ரில்லர் ‘லாக்’

கடந்த 2017-ல் வெளியான ‘அட்டு’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்தன் லிங்கா, அடுத்து இயக்கும் படம் ‘லாக்’. இதில் சுதிர், மது, ஹரிணி, நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் உட்பட பலர் நடித்துள்ளனர். நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், ஆர்பிஜி ராயல் பினோபென் குழு, சக்திவேல் பிக்சர்ஸ் இணைந்து இதை தயாரித்துள்ளன.‘‘சைக்கோ கொலையாளிகள் பற்றிய கதை. ஹாலிவுட் பாணியில் அடுத்தடுத்து முடிச்சுகள், மிரட்டும் திருப்பங்கள் என படத்தை உருவாக்கி உள்ளோம்’’ என்கிறார் இயக்குநர்.

ஜூலையில் ‘தி வாரியர்’

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தி வாரியர்’. இதை தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக ஆதியும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் னிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்கிறார். திரையரங்குகளில் இப்படம் ஜூலையில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

போலீஸ் அகாடமி கதை

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம் ‘டாணாக்காரன்’. இப்படத்தை பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரித்துள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தில் போலீஸாக நடித்த தமிழ், இப்படத்தை இயக்கியுள்ளார். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. படம் பற்றி நடிகை அஞ்சலி நாயரிடம் கேட்டபோது, ‘‘போலீஸ் அகாடமியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ‘நெடுநெல்வாடை’ படத்துக்கு பிறகு இதில் நடித்துள்ளேன். மேலும் 2 படங்களிலும் நடித்துள்ளேன். அதிக படத்தில் நடிக்க வேண்டும் என்பதைவிட, சரியான படங்களில் அர்த்தம் தரும் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை’’ என்கிறார்.அஞ்சலி நாயர்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x