Published : 14 Mar 2022 03:26 PM
Last Updated : 14 Mar 2022 03:26 PM

கோலிவுட் அப்டேட்ஸ் | நர்ஸாக வாணி போஜன்; தமிழில் நாக சைதன்யா

பிரபுதேவா நடிக்கும் 58-வது படமான ‘ரேக்ளா' படத்தை 'வால்டர்' இயக்குநர் அன்பு இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்கின்றனர். ஒருவர் வாணி போஜன். ‘‘வாணி சிறந்த நடிகை. இப்படத்தில் அவர் நர்ஸாக நடிக்கிறார். கதைக்கு முக்கியமான கேரக்டர். மற்றொரு கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. பிரபுதேவா, ரேக்ளா காளைகளை பராமரிப்பவர் என்பதால் படத்துக்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறோம்’’ என்கிறார் இயக்குநர் அன்பு. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

தமிழில் நாக சைதன்யா

தமிழில் ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் நாக சைதன்யா. வெங்கட் பிரபு இயக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட கதையில் இவர் நடிக்க இருப்பதாகவும், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கண்ணன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

இயக்குநர் ஆர்.கண்ணன், மலையாளத்தில் ஹிட்டான ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக் மற்றும் ’காசேதான் கடவுளடா’ படங்களை இப்போது இயக்கியுள்ளார். அடுத்து ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். தினேஷ், இதற்கு முன்பு ’கத்திக்கப்பல்’, ’துப்பாக்கி முனை’, `நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' படங்களை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, ஹன்சிகா நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை ஆர்.கண்ணன் இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x