Published : 07 Mar 2022 08:01 AM
Last Updated : 07 Mar 2022 08:01 AM

திரை விமர்சனம்: ஹே சினாமிகா

யாழனும் (துல்கர் சல்மான்), மவுனாவும் (அதிதி ராவ்) முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்து திருமணம் செய்துகொள்கின்றனர். 2 ஆண்டு இல்லற வாழ்வில் யாழனின் காதலும், கொஞ்சலும், மனைவியை கவனித்துக்கொள்ளுதலும் அப்படியே இருக்கின்றன. ஆனால், மவுனா இவற்றால் சலிப்படைகிறார். கணவனை தற்காலிகமாகப் பிரிய அவர் கையாளும் உத்தி சொதப்பிவிட, மனநல ஆலோசகரான மலர்விழியின் உதவியை நாடுகிறார். தனது கணவனை காதலிக்குமாறு மலர்விழியிடம் மவுனா உதவிகேட்க, அதன்பிறகு இந்த மூவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் கதை.

‘எ பாய் ஃபிரெண்ட் ஃபார் மை ஒய்ஃப்’ என்ற அர்ஜென்டினா நாட்டு படத்தை தழுவிஉருவாக்கப்பட்டுள்ள படம். நம் கலாச்சாரத்துக்கு பொருந்தாத ஒரிஜினல் படத்தின் அம்சங்களை தவிர்த்து, இதில் புரட்டிப்போட்டு, புத்துணர்வுடன் எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.

வழக்கம்போல, பார்த்ததுமே பிடித்துப்போய்விடும் பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக வந்து அசத்துகிறார் துல்கர் சல்மான். அசராமல் பேசுவது, விதவிதமாக சமைப்பது, வீட்டைசுத்தம் செய்வது, மனைவியை உருகி உருகிக்காதலிப்பது, அவரைக் கண்ணுக்குள் வைத்துகவனித்துக் கொள்வது என, எதையும் ரசனையோடு செய்யும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிக்கிறார். ஆனால், இந்த இயல்புகளே அவர்மீது மனைவிக்கு அலுப்பு, சலிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணம் ஏற்கும்படி இல்லை.

உணர்வுகளின் பேரலையில் சிக்கித் தள்ளாடும் மவுனாவாக அதிதியின் நடிப்பு அட்டகாசம். மனநல ஆலோசகர் என்பதுடன், கொஞ்சம் உளவுவேலையும் செய்யும் காஜல், சற்று முதிர்ந்த தோற்றத்தில் வருகிறார். திருமண வாழ்வில் இணைந்துவிட்ட இருவரில் ஒருவர் சந்தேகப்பட்டாலும், அவர்களுக்கு மனநல ஆலோசனையோ, சிகிச்சையோ பலன் அளிப்பதில்லை என்பதை காஜல் கதாபாத்திரம் வழியாக சொன்னவிதம் நன்று.

முக்கோணக் காதல் கதையில், சூழல் நகைச்சுவைக்கு நிறைய இடம் இருந்தும், இயக்குநர் அதை போதிய அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்றாலும் யோகி பாபு, மிர்ச்சி விஜய் இருவரும் தங்கள் பங்கை சரியாக தருகின்றனர்.

ஒவ்வொரு காட்சியையும் வண்ணமயமாக, அழகுணர்ச்சியுடன் கொடுக்க வேண்டும் என்றுசிரத்தையுடன் முயன்றிருக்கும் இயக்குநர் பிருந்தாவுக்கு நல்வரவு கூறலாம். ஒளிப்பதிவுக்கு பிரீத்தா ஜெயராமன், படத்தொகுப்புக்கு ராதா தர் என பெண் கலைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருப்பதையும் பாராட்டலாம். காதல் படத்துக்கான கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நவரசம். ஆனால் பாடல்கள் எடுபடவில்லை.

இல்லறத்தில் விட்டுக்கொடுத்தலும், அப்படியே ஏற்றுக்கொள்ளுதலும்தான் பேரன்பு என்பதை சொல்லும் படத்தில், வெறுக்கவும், திரும்ப ஏற்றுக்கொள்ளவும் முயலும் கதாபாத்திரங்களின் இயல்புக்கான காரணங்களை வலுவாக அமைத்திருந்தால், அழகுணர்ச்சி மிகுந்த காதல் படங்கள் வரிசையில் ‘ஹே சினாமிகா’வும் இடம்பிடித்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x