Published : 24 Jan 2022 01:09 PM
Last Updated : 24 Jan 2022 01:09 PM

திரை விமர்சனம்: மருத

ஊரார் மெச்சும் அளவுக்கு அண்ணன் மருது பாண்டியும் (சரவணன்) தங்கை மீனாட்சியும் (ராதிகா சரத்குமார்) பாசப் பிறப்புகள். தங்கை மகனின் காதுகுத்து விழாவுக்கு, தன் தகுதிக்கு மீறி ‘செய்முறை’யாக தாய்மாமன் சீர் செய்கிறார் மருது. காலம்கடந்தோடுகிறது. அண்ணன் வீட்டில்நடக்கும் சுப நிகழ்வுக்கு மீனாட்சியால் செய்முறையை திருப்பிச் செய்யமுடியவில்லை. செய்முறையை திரும்பப் பெற எண்ணியிருந்த மருதுவின் மனைவி காளியம்மாளால் (விஜி சந்திரசேகர்) இதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. மீனாட்சியின் கணவர் மாரிமுத்துவை (மாரிமுத்து) அவர் தருணம் பார்த்து அவமானப்படுத்த, மாரிமுத்து தன்னை மாய்த்துக்கொள்கிறார். அவரது மரணம், குடும்பங்களை தூரமாக்கிவிட, அடுத்த தலைமுறையில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை விவரிக்கிறது மீதி கதை.

அண்ணன் - தங்கை பாசத்துக்குள் ‘செய்முறை’ என்கிற தென்மாவட்ட கலாச்சாரப் பழக்கத்தை நுழைத்து, பாசத்துக்கு முன்னால் பணம்தான் எல்லாமும் எனப் பாடம் நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிஆர்எஸ். செய்முறை என்பது பாசத்தின் வெளிப்பாடாக இருந்து, பின்னர்படிப்படியாக பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே துடைத்தெறியும் பாதகமாகவும் மாறி நிற்பதை கதை மாந்தர்கள் வழியாக துணிந்து எடுத்துக்காட்டுகிறார்.

நாயகன், நாயகியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையாக இல்லாமல், கதாபாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட கதையாக, எல்லா கதாபாத்திரங்களுக்கும் உரியமுக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை எழுதியிருக்கும் ஜிஆர்எஸ், மீனாட்சியின் மகன் பாண்டியாகவும் நடித்திருக்கிறார்.

மருது பாண்டியாக சரவணனும், அவரது தங்கை மீனாட்சியாக ராதிகாவும் மனதை கொய்கின்றனர். காளியம்மாளாக நடித்துள்ள விஜி சந்திரசேகர் கதாபாத்திரத்தை, இத்தனை ஈவு ஈரக்கமற்ற ஒருவராக படைத்திருக்க வேண்டுமா என்று எண்ணும் அளவுக்கு தனது மிகை நடிப்பில் கொடூரத்தை கொண்டுவருகிறார் விஜி சந்திரசேகர். மாயனாக வரும் வேல ராமமூர்த்தியின் நடிப்பில் தெற்கத்தி மண்ணின் அசல் வாசம்.

முறைப் பையனை காதலிக்கும் அமுதவல்லியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கதாபாத்திரத்தில் புதுமை இல்லை.சில காட்சிகள் வந்துபோகும் கஞ்சாகருப்பு, ஒரு இடைவெளிக்குப் பிறகு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

மதுரை கிராமங்களின் முகத்தை சினிமாவுக்காக ஜோடனை செய்யாமல், அப்படியே கச்சாத் தன்மையுடன் ஒளிப்பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டை ரமேஷ்.பி.

இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தாங்கிக் கொள்கின்றன.

அண்ணன் - தங்கை பாசம் என்கிற பழைய சட்டகத்துக்குள் ‘செய்முறை’ என்கிற கலாச்சார வழக்கத்தின் நிகழ்கால போக்கை கேள்விக்கு உட்படுத்தி, அதை சீர்திருத்திக்கொள்ள அறிவுறுத்தும் படத்தில், அதன் நீளத்தை கணிசமாக குறைத்திருந்தால் மண்வாசம் இன்னும் நன்கு வீசியிருக்கும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x