Last Updated : 27 Apr, 2016 07:12 PM

 

Published : 27 Apr 2016 07:12 PM
Last Updated : 27 Apr 2016 07:12 PM

அஜித் முதல் நட்சத்திர கிரிக்கெட் டிக்கெட் வரை: நடிகர் சங்க நிர்வாகிகள் விளக்கம்

அஜித், சிம்பு, பெயர் மாற்றம், டிக்கெட் விற்பனை, நட்சத்திர கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளுக்கும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர்:

தென்னிந்திய நடிகர் சங்கம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. தன்னிசையாக ஒரு கட்சிக்கு என்று செயல்படாது. ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த ஒரு முக்கிய நடிகராவது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். எங்களுக்கு தமிழக அரசு ரொம்ப முக்கியம். எங்களுடைய ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் ஒப்புதல் வேண்டும். 3500 உறுப்பினர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் இக்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல மாட்டோம்.

62 வருடமாக 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நினைத்தவுடன் பெயரை மாற்றிவிட முடியாது. நிறைய சட்ட சிக்கல்கள் அடங்கியிருக்கிறது. ரஜினி சாரிடம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவரும் இந்த பெயர் மாற்றம் குறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை.

நடிகர் சங்க செயலாளர் விஷால்:

நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடர்பாக நிறைய சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் நாங்கள் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தோம். சர்ச்சைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

அஜித்திற்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அஜித்தை சார் என்று அழைக்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு அவரை நீண்ட நாட்களாக தெரியும். அதே போல ஒருவர் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று கூறும்போது, கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்று சொல்ல முடியாது. வந்தவர்கள் மீது அதிக சந்தோஷமோ, வராதவர்கள் மீது அதிக கோபமோ இல்லை. நாங்கள் அனைவரையும் சரி சமமாக தான் பார்க்கிறோம்.

அஜித் வராததற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எனக்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களும் பிடிக்கும். நான் பிரச்சினை பண்ணுவதற்காக நடிகர் சங்கம் வரவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் அவ்வளவு தான். அதற்குப் பிறகு நாங்கள் பதவியில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அக்கட்டிடம் மூலமாக வரும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் நல்லது நடக்கும்.

நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப் அல்லது லீக் கிளப்போ (League Club) அல்ல. எங்களுக்கே சிம்பு விலகுகிறேன் என்பது புதிதாக இருக்கிறது. ஆனால் அவருடைய கருத்தை மதிக்கிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு சிம்புவை ஒரு நடிகராகவும், தோழராகவும் பிடிக்கும். அவர் அப்படி பேசியதைத் தவிர்த்திருக்கலாம்.

ரஜினி சார் ரொம்ப சந்தோஷப்பட்டார். "நல்லா பண்றீங்க. ஆல் தி பெஸ்ட்" என்றார். ரஜினி சார், கமல் சார் மாதிரி விஜய், அஜித் இருவரும் வந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்போம்.

முன்னணி நடிகைகளை இனிமேல் நடிகர் சங்கம் சம்பந்தமான விழாக்களுக்கு அழைப்பதாக இல்லை. எனக்கே அழைத்து போரடித்துவிட்டது.

நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி:

கட்டிடம் தொடர்பான திட்டங்கள் எல்லாம் ஒப்புதலுக்காக அனுப்ப இருக்கிறோம். தற்போது இருக்கும் பணம் இன்னும் 5 மாதங்களுக்குத் தான் தாங்கும். கட்டிடம் தொடர்பாக இன்னும் 6 மாதத்திற்கான பணத்தை தயார் செய்துவிட்டு தான் பணியைத் தொடங்குவோம். கட்டிடம் தொடங்கிவிட்டால் நிறுத்தக் கூடாது, போய் கொண்டே இருக்க வேண்டும்.

நிதி திரட்டல் திட்டம், படம் நடிக்கும் திட்டம் இப்படி நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறோம். கமல் சார் இதற்காக எந்த விஷயத்தில் என் உதவி என்றாலும் சொல்லுங்கள் நான் கூடவே இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அனைவருக்குமே நடிகர் சங்கத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

நடிகர் சங்கத் துணை தலைவர் பொன்வண்ணன்:

அஜித் இந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லவில்லை. அவர் எந்த நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார். விவேக் சார் வீட்டில் வைத்து நாங்கள் அனைவருமே அஜித் சாரோடு 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் மீது எங்களுக்கு எந்த ஒரு மனஸ்தாபமும் கிடையாது. ஆனால், இதை திட்டமிட்டு தவறாக ஊடகத்தில் பரப்பி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கம் இதில் தலையிட வேண்டும் என்று கடிதம் கொடுத்தால் மட்டுமே இந்த விஷயத்தில் சங்கம் தலையிட முடியும். வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு கடிதம் மட்டும் கொடுங்கள், சங்கம் பின்னால் நிற்கும் என்று சொன்னோம். நட்பு ரீதியாக கேட்டோம். அப்பிரச்சினையை அப்படியே விட்டு விட்டார்கள். அதை மீண்டும் இப்போது பேசி இருக்கிறார் சிம்பு. சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இதை பிரச்சினையாக்க நாங்கள் விரும்பவில்லை.

தேர்தல் ஆணையம், அரசு, காவல்துறை என மூவரிடமும் பேசி கிரிக்கெட் மைதானத்திற்கான உரிமம் 3 நாட்களுக்கு முன்பு தான் பெற்றோம். இன்னும் சிறப்பாக நடத்தி இருக்க முடியும். ஆனால் எங்களுக்கு நேரம் கம்மியாக தான் இருந்தது. மக்கள் தொடர்பாளர்களை வைத்து அனைவருக்குமே அழைப்பிதழ்கள் அனுப்பினோம். நிகழ்ச்சியை தயாரித்து 18 மணி நேரம் வீடியோ கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கும் தனியார் தொலைக்காட்சிக்கும் போடப்பட்ட ஒப்பந்தம்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனையாகவில்லை என்பது உண்மை தான். 3 நாட்களுக்கு முன்பு தான் டிக்கெட் அடித்தோம். எங்களுடைய படங்களை எல்லாம் காட்டி மைதானத்தை நிரப்பி போட்டி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால் பண்ணியிருக்க முடியும். டிக்கெட் அடித்தது ஏனென்றால் ரசிகர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்காக அடித்தோம். பொது நிகழ்ச்சி என்பதால் இணையத்தில் டிக்கெட் விற்பனைக்கு வைத்தோம் அவ்வளவு தான். நாங்கள் என்ன திட்டமிட்டமோ, அதை சாதித்துவிட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x