Last Updated : 08 Jan, 2022 02:20 PM

 

Published : 08 Jan 2022 02:20 PM
Last Updated : 08 Jan 2022 02:20 PM

சிட்னி பாய்ட்டியர் மறைவு - நிற பேதங்களைத் தகர்த்தவர்; ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பின நடிகர்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும், முதல் முறை ஆஸ்கர் விருதை வென்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவருமான சிட்னி பாய்ட்டியர் (Sidney Poitier) காலமானார். அவருக்கு வயது 94.

1927ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் பிறந்தவர் சிட்னி பாய்ட்டியர். பஹாமியரான இவர் அமெரிக்கரானதே ஒரு சுவாரஸ்யமான கதை. பஹாமாஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகளான சிட்னியின் பெற்றோர் தங்களது தோட்டத்தில் விளைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்வதற்காக அடிக்கடி மியாமி செல்வதுண்டு. சிட்னியின் அம்மா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் அப்படி மியாமி சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பிறந்தார் சிட்னி பாய்ட்டியர். குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தை உயிர் பிழைப்பதே சிரமம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட மியாமியிலேயே தங்கியிருந்து குழந்தைக்கு மூன்று மாதம் சிகிச்சையளிக்க வேண்டிய சூழல். இதனால் சிட்னி பாட்யேய்க்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கியது.

தனது குழந்தைப் பருவத்தை பஹாமாஸ் நாட்டின் கேட் ஐலாண்டில் வாழ்ந்து வந்த சிட்னி, 16-வது வயதில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வேலை தேடி வந்தார். அங்கு ஒரு சிறிய ரெஸ்ட்டாரன்ட்டில் பாத்திரம் கழுவும் வேலை அவருக்குக் கிடைத்தது. எழுதப் படிக்கத் தெரியாதவரான சிட்னிக்கு அங்கு வெய்ட்டராக வேலை பார்த்த ஒருவர் செய்தித்தாள்களைப் படிக்கக் கற்றுக் கொடுத்தார்.

1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது, தனது வயதை மறைத்து ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார் சிட்னி. ராணுவ மருத்துவமனையில் ஓராண்டு வேலை பார்த்த அவர் அந்த வேலை பிடிக்காமல் மீண்டும் தனது பழைய வேலையான பாத்திரம் கழுவும் வேலைக்கே திரும்பினார்.

அப்போது ஒரு பிரபல மேடை நாடக நிறுவனம் ஒன்று நடத்திய ஆடிஷனில் சிட்னிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சிட்னி நடித்த முதல் மேடை நாடகம் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. காரணம் அவருடைய பஹாமிய வட்டார மொழி. எனவே தன்னுடைய நடிப்புத் திறனையும், பேச்சு வழக்கையும் மாற்ற முடிவு செய்தார் சிட்னி. இதற்காக அடுத்த ஆறு மாதம் மிகுந்த அர்ப்பணிப்புடன் பயிற்சிகளை மேற்கொண்டார்.

சிட்னிக்கு இரண்டாவது வாய்ப்பு புகழ்பெற்ற ‘ப்ராட்வே தியேட்டர்’ குழுவின் மூலம் கிடைத்தது. இரண்டாவது மேடை நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறவே அடுத்தடுத்த நாடக வாய்ப்புகள் தொடர்ந்து வரத் தொடங்கின. சிட்னியின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

1949ஆம் ஆண்டு ‘நோ வே அவுட்’ என்ற படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கான வாய்ப்பு சிட்னியைத் தேடி வந்தது. இதில் அவர் நடித்த மருத்துவர் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெறவே அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் சிட்னி முன் வந்து குவியத் தொடங்கின.

1958ஆம் ஆண்டு ஸ்டான்லி க்ரேமர் இயக்கத்தில் டோனி கர்டிஸ் உடன் சிட்னி இணைந்து நடித்த ‘தி டீஃபியன்ட் ஒன்ஸ்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. சிட்னியின் நடிப்பையும் பத்திரிகைகள் குறிப்பிட்டுப் பாராட்டின. சிட்னி பாய்ட்டியர் என்ற நடிகரின் பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான். அந்தப் படம் 8 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. முதன்முறையாக ஆஸ்கர் விருதுப் போட்டியில் சிறந்த நடிகருக்கான பிரிவில் முதல் முறையாக ஒரு கறுப்பின நடிகர் பரிந்துரைக்கப்படுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிட்னிக்கு அந்த ஆண்டு விருது கிடைக்கவில்லை.

அதன் பிறகு 1961ஆம் ஆண்டு ரால்ஃப் நெல்சன் இயக்கிய ‘தி லிலீஸ் ஆஃப் தி ஃபீல்டு’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை சிட்னி பாய்ட்டியர் வென்றார். இதன் மூலம் முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற முதல் கறுப்பின நடிகர் என்ற பெருமை சிட்னிக்குக் கிடைத்தது.

1967ஆம் ஆண்டு சிட்னி நடிப்பில் வெளியான ‘டு சார், வித் லவ்’, ‘இன் தி ஹீட் ஆஃப் தி நைட்’, ‘கெஸ் ஹூ’ஸ் கமிங் டு தி டின்னர்’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றன.

தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிட்னிக்கு 2002ஆம் ஆண்டு அமெரிக்க சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பைப் போற்றும் விதமாக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அதே ஆண்டு நடிகர் டென்ஸெல் வாஷிங்டன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஆஸ்கர் விருதை வென்ற இரண்டாவது கறுப்பின நடிகர் டென்ஸெல் வாஷிங்டன்.

வெறும் நடிகராக மட்டுமின்றி கறுப்பின மக்களுக்காகத் தனது படங்களின் மூலமும், பொதுவெளியிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சிட்னி பாட்யேய். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் சிட்னி நேற்று (ஜன 07) காலமானார்.

கறுப்பின மக்களை சக மனிதர்களாகப் பார்க்கவே தயங்கிய காலகட்டத்தில் ஒரு சிறிய ரெஸ்டாரன்ட் ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி ஹாலிவுட்டிலன் பல்வேறு நிற பேதங்களைத் தகர்த்தெறிந்த சிட்னி பாய்ட்டியரின் சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x