Last Updated : 07 Jan, 2022 05:05 PM

 

Published : 07 Jan 2022 05:05 PM
Last Updated : 07 Jan 2022 05:05 PM

சாதி சம்பந்தப்பட்ட படங்கள் அதிகம் வரக்கூடாது: இயக்குநர் கே.பாக்யராஜ் சிறப்பு நேர்காணல்

கே.பாக்யராஜ்

மனதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி படபட பட்டாசாக வெடிக்கும் மனிதர் கே.பாக்யராஜ். பிறந்த நாளில் வாழ்த்து சொன்னதும் பூரிப்பும் புன்னகையுமாகப் பேசினார்.

படம் எடுக்கும் ஐடியா எதுவும்..? (கேள்வியை முடிக்கும் முன்பே) நிச்சயமாக... ‘பிரளயம்’னு ஒரு படத்திற்கான டைட்டில் நான் பதிவு பண்ணி வைத்திருக்கிறேன். என்னுடைய திரைக்கதை, டைரக்ஷன்ல தொடங்குகிறேன். வழக்கமான பாக்யராஜ் ஸ்டைலில் இல்லாமல் இது புதுமையாக இருக்கும். அன்று நான் ‘ஒரு கைதியின் டைரி’ படம் பண்ணியது வித்தியாசமானதாக இன்றுவரை பேசப்படுகிறது. ‘சொக்கத்தங்கம்’ படத்தை எடுத்துக்கிட்டோம்னா அது விஜயகாந்தை மட்டும் மனதில் வைத்துப் பண்ணப்பட்டது. அது ஒரு வகையான ஆங்கிள்ல இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’கூட என்னோட படங்கள்ல கொஞ்சம் மாறுபட்ட படம்தான்.

இதுபோக மற்ற சில படங்கள் எல்லாமே என்னை முன்னிறுத்தி எனக்காகப் பண்ணப்பட்ட படங்கள். குறிப்பாக ‘முந்தானை முடிச்சு’, ‘சுந்தரகாண்டம்’, ‘எங்க சின்ன ராஜா’, ‘இது நம்ம ஆளு’ எல்லாமே எனக்கான படங்களாக இருக்கும்.

அதுமாதிரி ‘பிரளயம்’ ஒரு த்ரில்லர் டைப் படம். அடுத்து என்ன... அடுத்து என்ன அப்படின்ற மாதிரி இருக்கும். இதில் நான் நடிக்கிறதுக்கு கேரக்டர் இல்லன்னாகூட, டைரக்‌ஷன் பண்ணும்போது கண்டிப்பா வேறு மாதிரி இருக்கும். இப்ப நடிக்கும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாகும் அளவுக்கு இந்தப் படத்தைப் பண்றேன்.

எம்.ஜி.ஆர். உங்களைக் கலை வாரிசு என்று அறிவித்தார். அதை உங்கள் பாக்யமாகக் கருதுகிறீர்களா?

வாழ்க்கையில சிரஞ்சீவியாக சில பேர்தான் வாழ முடியும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி சாரையெல்லாம் பார்க்க முடியுமான்னு ஒரு ஏக்கத்தோடு இருந்தோம் அந்தக் காலத்தில... அந்த வயசுல.

அப்புறம் நான் திரைத்துறைக்கு வந்தபிறகு இரண்டு பேரையும் வெச்சு சினிமா எடுத்தது, எம்.ஜி.ஆர் என்னைக் கலை வாரிசுன்னு சொன்னது எல்லாம் மிகப்பெரிய வரப் பிரசாதம். அந்த வகையில நான் உண்மையில பாக்யராஜ் என்பதை நான் பாக்யமாகக் கருதுறேன். என் அம்மா எனக்கு பாக்யராஜ்னு பெயர் வச்சதும் ரொம்ப தீர்க்கதரிசனத்தோடதான்னு நினைக்கிறேன்.

அவர்களோட இடத்தை இனி நிரப்புவதற்கு யாரும் இல்லை. அவர்களிடம் பெற்ற பெயரைக் காப்பாற்றுவதற்கு இன்னும் என்ன சாதிக்க முடியும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் பெயரைக் காப்பாற்றி என்னுடைய பெயரையும் நல்லவிதமாகத் தக்கவைத்துக் கொள்வேன்.

சிவாஜி சாரையும் என்னால மறக்க முடியாது. இமயத்துடன் இணைவதில் பெருமை கொள்கிறேன் என்று தான் 'தாவணி கனவுகள்`ல டைட்டில் கார்டு போட்டிருந்தேன். அவரையும் வெச்சு சினிமா எடுக்க முடியுமான்னு நினைத்தவேளையில் அவரை வைத்து டைரக்‌ஷன் பண்ணியது பெரிய விஷயம்.

பாரதிராஜாவைத் தாண்டி உங்களின் குருவாக யாரைச் சொல்வீர்கள்?

நான் அசிஸ்டன்ட் டைரக்டராக முழுமையாக வேலை பார்த்தது ஒரு படம்தான். பாரதிராஜாதான் எப்பவும் என் ஒரே மானசீக குரு. அதுபோக சினிமாவில் இதற்கு முன்பாக இருந்த பாலசந்தர் சார், ஸ்ரீதர் சார் எல்லாருமே என் குருக்கள்தான். டெக்னிக்கலாக கற்றுக்கொண்டது பாரதிராஜா சாரிடம்தான்.

எப்பவுமே சினிமாவில் பழசு இப்படி இருக்குன்னு தெரிந்தால்தான் புதுசா இப்படி பண்ணலாம்னு தெரிந்துகொள்ள முடியும். சினிமாவில் நான்தான் இதைப் பண்ணிட்டேன்னு எப்பவும் சொல்ல முடியாது. எல்லாருமே ஒருத்தர்கிட்டயிருந்து ஒருத்தர்னு கத்துக்குறோம். கத்துக்கிடலாம்.

உங்கள் உதவி இயக்குநர்களின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீகள்?

பாண்டியராஜன், பார்த்திபன், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன், வி.சேகர்னு இப்படி எல்லாருமே ஒவ்வொரு பேட்டர்ன்ல வெற்றிப் படம் கொடுத்து தன்னை நிரூபிச்சிட்டாங்க. பார்த்திபன் ஒரு ஸ்டைல்னா, பாண்டியராஜன் ஒரு ஸ்டைல், வி.சேகர் மற்றும் ஜி.எம்.குமார்னு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனித்தனியான திறைமையில வந்தவங்கதான். ஒரு காலத்துல வி.சேகர் படம்னாலே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிக்கு கியாரண்டி. பார்த்திபன் இன்னிக்கும் பாருங்க காலத்துக்கேத்த வெற்றி ஓட்டத்துல `ஒத்த செருப்பு`ன்னு ஒரு ஹிட் படம் கொடுத்தாரு. பாண்டியராஜன் நிறைய ஷார்ட் ஃபிலிம் கொடுத்துட்டு இருக்காரு.

சினிமாவைத் தவிர்த்து உங்கள் பலம், பலவீனம்?

நான் அதிகம் படிக்கவில்லை. இங்கிலீஷ்ல வீக். இதை எப்படியோ என் குழந்தைகள் ஸ்மெல் பண்ண¤ட்டாங்க போல. கரெக்டா என்கிட்ட மட்டும் தமிழில் பேசிவிட்டு, அவங்க அம்மா, அத்தை, மாமா எல்லார்கிட்டயும் இங்கிலீஷ்ல பேசுவாங்க. என்கிட்ட பேசும்போது மட்டும் டக்குன்னு தமிழ் வந்திரும். அதுக்கு அவங்க அம்மா, ஏன்டா டாடிகிட்ட மட்டும் அப்படின்னு கேட்டா... டாடியை கஷ்டப்படுத்த வேண்டாம்லாமான்னு சொல்லுவாங்க.

ஆங்கிலம் என்பது கம்யூனிகேசனுக்குத்தான் தேவை. திறமை அடிப்படையில் இல்லை. இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவு தமிழன் பெயர் வாங்கிவிட்டான். நம்மகிட்ட இருக்கிற தமிழ் நமக்கு சந்தோஷமான விஷயம்.

வீட்டில் தெலுங்கு பேசுறதனால நானும் பேசுவேன். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என சகல பாஷைகளும் எங்கள் வீட்டில் உண்டு. பூர்ணிமா தெலுங்கு பேசுவாங்க. மலையாளத்துல பூர்ணிமா பிஸியாக நடித்த பின்புதான் தமிழுக்கு வந்தாங்க. எங்க வீட்ல எல்லா மொழிகளும் இருக்கு.

இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா எல்லாரும் சினிமா துறையில இருக்கோம். எங்கள் குடும்பமும் கலைக் குடும்பம்தான். எதிர்காலத்துல வர்றவங்களும் சினிமா துறையைச் சார்ந்தவங்களாகத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர்த்து ஒன்றும் தெரியாது என்பதை நான் மிகப்பெரிய பலமாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்.

'பாமா ருக்மணி' , 'சின்னவீடு' மாதிரியான படங்களை இப்போ எடுக்கலாமா?

`பாமா ருக்மணி` படத்துல நடிச்ச பிரவீணா என் மனைவியாக வந்தாங்க. `பாமா ருக்மணி`ங்கிறது எல்லா கடவுளுக்கும் இரண்டு பொண்டாட்டிகள் இருக்கிறாங்க. அது ஒரு பிரச்சினைக்குரிய விஷயம்தான். அதை எப்படி திறமையோடு சமாளிக்கிறாங்க அப்படிங்கிறதுதான் விஷயம்.

`சின்னவீடு` படத்துல ஒரு கல்யாணம் பண்றோம் அப்படின்னா நீங்க வெளி அழகைப் பார்க்காதீங்க. அவர்களின் அக அழகைப் பாருங்கள் என்பதைத்தான் `சின்னவீடு`ல நான் கருத்தாகச் சொன்னேன். `சின்ன வீடு` மாதிரியான படங்களை எப்ப வேணும்னாலும் ரிப்பீட் பண்ணி எடுத்துக்கலாம்.

உங்கள் படங்களில் வரும் பெண்கள் மட்டும் தனித்துவத்துடன் இருப்பது எப்படி? அதில் உள்ள ரகசியம் என்ன?

பெண்கள்தான் ஆணுக்கே ஒரு பலம். நம்முடைய பாரம்பரியமே தாய் வழிச் சமூகம்னு சொல்லுவோம். எவ்ளோ கெட்டவனாக இருந்தாலும் அவனுக்கு அம்மான்னா ஒரு பாசம் இருக்கும். தாய்க்கு எப்படி தன் பிள்ளையோ அதுபோலத்தான் அவனுக்கும். அதுலயும் மனைவி ஸ்தானம் ரொம்ப முக்கியமானது. அதுக்கும்மேல அக்கா, தங்கச்சிங்க கூட பிறக்கிறதுக்கே ஒரு கொடுப்பினை வேணும். அவங்க மேல பாசம் வச்சி கல்யாணம் பண்ணிக் கொடுத்து, அவர்களுக்கு சீர் வரிசை செய்து கொண்டாடி, கடைசி வரைக்கும் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்று ட்ராவல் செய்வதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும்.

ஒரு படத்துலகூட, மனைவியைத் தவிர, பார்க்கும் எல்லா பெண்களையும் அவரவர்களின் வயதுக்கு தகுந்தமாதிரி அக்காவாகவோ, அண்ணியாகவோ, தங்கையாகவோ, அம்மாவாகவோ பார்க்க வேண்டும் என்று நான் சொல்லியிருப்பேன்.

அதுபோக ஒரு பெண்ணுக்குத் துணையாக வருகிறவன் வெறும் கணவன் மாத்திரம் அல்ல. அவன் ஒரு நல்ல ஃப்ரண்டாக, நல்ல கைடாக, நல்ல தகப்பனாக இருக்கணும். இப்படியெல்லாம் ஒரு பெண்ணுக்கு அந்தக் கணவன் அமைந்துவிட்டால் அவள்தான் பாக்கியசாலி. மனம் விட்டுப் பழகும்படி ஒரு ஆண்மகன் கணவனாக அமைந்துவிட்டால் அவள் வாழ்க்கை சிறக்கும். இந்தப் பொறுப்புகளை எல்லாம் உணர்ந்து எல்லா ஆண்களும் நடந்துகொண்டாலே போதும். அந்த மனைவிக்கு இதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவுமே கிடையாது.

ஒரு வீட்டில் பெண் ஒருத்தி படித்துவிட்டால் அந்தக் குடும்பமே கல்வி கற்று முன்னேறிவிடும். இப்பொழுது அந்த முக்கியத்துவத்தை அவங்களுக்குக் கொடுத்துக்கொண்டு வருகிறோம்.

முந்தானை முடிச்சு 2’ எப்படி வந்திருக்கு?

`முந்தானை முடிச்சு 2` இப்போது ரீமேக் பண்ணி எடுத்துக்கிட்டு இருக்காங்க. நானும் இந்தக் காலகட்டத்துக்குத் தகுந்த மாதிரி படத்தில் சில விஷயங்களை சேஞ்ச் பண்ணிக் கொடுத்திருக்கிறேன். அதையும் ஜனங்க வந்து இந்தப் படத்தை இப்படி பார்க்கிறதுகூட நல்லாத்தான் இருக்கு அப்படின்னு ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்.

இந்த மாதிரி படங்கள் எவர்கிரீன் ஆனது. இன்னும் 30 வருஷம் கழிச்சு இந்தப் படங்களை டிவியில் போட்டாலும் ஆனந்தமாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பாங்க. இப்போ இந்தப் படத்தை சசிகுமார் பண்ணிட்டு இருக்கார்.

சமீபத்தில் நீங்கள் ரசித்த படம்?

`கோமாளி.` டைரக்டர் இந்தப் படத்தை வித்தியாசமாகப் பண்ணியிருந்தார். கார்த்திக் நரேனின் `துருவங்கள் 16` படங்கள் எல்லாம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

இப்போ நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு பண்றேன் என்னன்னா, தற்போது சாதி சம்பந்தப்பட்ட படங்களாக நிறைய வருகின்றன. அது அதிகமாக வரக்கூடாது. வந்தால் என்னாகும் என்று கேட்டால் மீண்டும் அது மக்களிடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்திவிடும்.

`இது நம்ம ஆளு` எடுத்துக்கிட்டோம்னா எங்களையும் உங்க ஆளாக பாருங்கன்னு சொல்லியிருப்பேன். எப்பவும் மைல்டா பேசணும். அதுக்காகவே முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பது தவறு. இதுவும் நல்லது அதுவும் நல்லது அப்படின்னு கையைக் காட்டிட்டுதான் போகணும். இதுதான் நல்லதுன்னு சொல்லக்கூடாது. நாலு ஊர்ல இருந்து வந்தவங்க பொதுவான இடத்துல வந்து வாழுறப்போ என் ஊர்னு ஒருத்தன் சொல்லலாம். அதையே என் ஊர்தான் டா எல்லாத்துலயும் பெஸ்ட் அப்படின்னு அழுத்தம் திருத்தமாக சொன்னா தப்பா போகும். யாரும் யாரையும் எப்பவும் சங்கடப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x