Published : 27 Dec 2021 01:49 PM
Last Updated : 27 Dec 2021 01:49 PM

ம.பி. அமைச்சர் எச்சரிக்கை எதிரொலி: சன்னி லியோனியின் 'மதுபன்' பாடல் வரிகள் மாற்றம்

மத்தியப் பிரதேச அமைச்சர் நரோடடாம் மிஸ்ராவின் எச்சரிக்கையின் எதிரொலியாக, சன்னி லியோனி தோன்றும் 'மதுபன்' பாடல் வரிகளையும், பாடல் தலைப்பையும் மாற்றுவதற்கு 'சரிகமா' நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

'மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே' என்ற பாடல் 1966ஆம் ஆண்டு வெளியானது. முகமத் ரஃபியால் பாடப்பட்ட இப்பாடல் மிகவும் பிரபலமானது. இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி நடனமாடியிருக்கிறார். இப்பாடலை 'சரிகமா' நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, இப்பாடலில் சன்னி லியோன் நடனம் ஆடியிருப்பதற்கு மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து சாமியார் சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறும்போது, “சன்னி லியோனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரது வீடியோ ஆல்பத்தைத் தடை செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வோம். சன்னி லியோன் நடித்த காட்சியை வாபஸ் பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது" என்று எச்சரித்தார்.

'மதுபன்' பாடல் கிருஷ்ணா, ராதாவுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடல். இப்பாடலில் சன்னி லியோனின் நடன அசைவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடையே, "சில விஷமிகள் தொடர்ந்து இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகின்றனர். ராதை நமக்கு கடவுள். அவரை வெவ்வேறு கோயில்களில் நாம் வழிபடுகிறோம். ஷாரிப் தனது சொந்த மதம் சார்ந்து இப்படி ஒரு பாடலை கம்போஸ் செய்வாரா? சன்னி லியோனி, ஷாரிப் மற்றும் தோஷி ஆகியோரை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த வீடியோவை நீக்கவில்லை எனில், அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று மத்தியப் பிரதேச அமைச்சர் மிஸ்ரா எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், 'மதுபன்' பாடலில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ள 'சரிகமா' நிறுவனம், "மதுபன் பாடல் வரிகள் குறித்த எதிர்வினைகளை அறிந்தோம். சிலரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்வதுடன், பாடல் தலைப்பையும் மாற்றுகிறோம். ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பாடல் மூன்று நாட்களுக்குள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய பாடல் வீடியோ வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x