Last Updated : 31 Mar, 2016 11:35 AM

 

Published : 31 Mar 2016 11:35 AM
Last Updated : 31 Mar 2016 11:35 AM

தமிழ் சினிமா இடைத்தரகர்கள் கையில் போய்விட்டது: இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்

தமிழ் சினிமா தற்போது இடைத்தரகர்கள் கையில் போய்விட்டது என 'காட்டுப்புறா' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டமாக குறிப்பிட்டார்.

பாபு கணேஷ் இயக்கத்தில் அவருடைய மகன் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் படம் 'காட்டுப்புறா'. தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு படத்தின் இசையை வெளியிட்டார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசியது:

"இந்த பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். நான் 30 ஆண்டுகளுக்கு முன் 'செம்பருத்தி' எடுத்தபோது அவர் 'கடல்புறா' எடுத்தார். இப்போது 'காட்டுப்புறா' எடுத்திருக்கிறார். அவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான் ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். என் மகனை சிசி எல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று. ஏதாவது செய்ய முடியுமா என்றார்.

அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா என்றேன். என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். 'என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..' அவள் என்னைக் கேலி செய்தாள்.செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.

யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள்..தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்.இப்படி மானத்தை வாங்காதீர்கள். ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்.இன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது.இன்றுள்ள சூழலில் 'காட்டுப்புறா'வை வெளியிட முடியுமா? இன்றைக்குள்ள சினிமாபழையபடி வருமா?

இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான்? பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும் (தயாரிப்பாளர்களை )விரட்டப் போகிறார்கள். இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்? '' என்று இயக்குநர் செல்வமணி காட்டமாக பேசினார்.

விழாவில் கிரிக்கெட்வீரர் பத்ரிநாத் சுப்ரமணியன், மிஸ்டர் வேர்ல்டு ராஜேந்திரமணி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி , பாடகர் கானாபாலா, பாடகி வாணிஜெயராம், இயல்இசை நாடக மன்ற செயலாளர் சச்சு. தயாரிப்பாளர்கள் 'பிலிம் சேம்பர்' காட்ரகட்டபிரசாத்,ஜெயந்தி சண்ணப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x