Published : 30 Nov 2021 10:44 AM
Last Updated : 30 Nov 2021 10:44 AM

'வரலாறு' அஜித் கதாபாத்திரப் பின்னணியில் சிவசங்கர் மாஸ்டர்: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு

சிவசங்கர் மாஸ்டருடன் ‘வரலாறு’ படத்தில் பணியாற்றிய நினைவுகளை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பகிர்ந்துள்ளார்

‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலின் நடன வடிவமைப்புக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் இவரது நுரையீரல் 75 சதவீதம் வரை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹைதராபாத்தில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சைப் பலனின்றி, நேற்று முன்தினம் மாலை சிவசங்கர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன் பின்னர் இவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி அருகே உள்ள மின் மயானத்தில் நேற்று (நவ.29) தகனம் செய்யப்பட்டது. தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் சிவசங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருடன் ‘வரலாறு’ படத்தில் பணியாற்றிய நினைவுகளை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

'' ‘வரலாறு’ படத்தில் பணியாற்றுவதற்கு நீண்ட காலம் முன்பே எனக்கு சிவசங்கர் மாஸ்டரைத் தெரியும். நாங்கள் படத்தைத் தொடங்கியபோது, தனது கதாபாத்திரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற தயக்கம் அஜித்துக்கு இருந்தது. நான் சிவசங்கர் மாஸ்டர் குறித்து அஜித்திடம் சொல்லி அவரை ஊக்கப்படுத்தினேன்.

‘படத்தில் உங்கள் கதாபாத்திரம் போலவே நிஜ வாழ்வில் சிவசங்கர் மாஸ்டருக்கு இரண்டு மகன்கள் உண்டு. ஆனால், அவரது உடல் மொழியில் மட்டுமே சிறிது பெண் தன்மை இருக்கும். அவர் தன்னுடைய கலை வடிவத்தை தன்னுடைய உடலில் ஏற்றுக் கொண்டதே அதற்குக் காரணம். அவர் வணக்கம் சொல்வது, திட்டுவது, வெற்றிலை போடுவது என அனைத்திலும் ஒரு பெண் தன்மை இருக்கும். யாரும் அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை’ என்று அஜித்திடம் கூறினேன்.

மாஸ்டர் மீதான அன்பே அப்படத்தில் அஜித்துக்கு ‘சிவசங்கர்’ என பெயர் வைக்கக் காரணமாய் அமைந்தது. மாஸ்டர் எப்போதும் ஜவ்வாது பூசிக் கொள்வார். அவர் ஒவ்வொரு முறையும் என் அலுவலகத்துக்கு வரும்போது, ஒட்டுமொத்த இடமும் மணம் கமழும்''.

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x