Published : 13 Feb 2016 06:30 PM
Last Updated : 13 Feb 2016 06:30 PM

எனக்காக அவர் எழுதித் தந்த பதில்- பாலு மகேந்திராவை நினைவுகூர்ந்த அர்ச்சனா நெகிழ்ச்சி

தன்னைத் திரையுலகம் நிராகரித்தபோது, தனக்காக பாலு மகேந்திரா எழுதித் தந்த 'பதில்' ஒன்று குறித்து நடிகை அர்ச்சனா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்திய சினிமாவின் போற்றத்தக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

அவரது மனைவி, மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், நடிகை அர்ச்சனா, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் பாமரன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் பாலு மகேந்திரா குறித்தும் அவரது படைப்புகள் பற்றியும் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவை நினைவுகூர்ந்து பேசிய நடிகை அர்ச்சனா, " 'சினிமாவுக்கு தகுதியே இல்லாதவர்' என்று சொல்லி, என்னை ஒரு சில படங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். அப்போதுதான் பாலு மகேந்திரா அவர்களை சந்தித்தேன். அவரை யார் சந்தித்தாலும் புகைப்படம் எடுப்பார், என்னையும் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்கள் கழித்து "எனது படத்தில் நீ நடிக்கிற" என்றார். நான் நடிக்கலாமா என்று வெறுத்து போய் இருந்தேன்.

"அன்பு, பாசம், காதல், உண்மை, உணர்வுகள், சினிமா இவை எல்லாமே எளிமையாது. எனது எளிமையான சினிமாவுக்கு உன்னை மாதிரி ஓர் எளிமையான பெண் இருந்தால் போதும்" என்று சொன்னார். அதற்குப் பிறகு என்னை அவரது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

மூன்றாம் நாள் படப்பிடிப்பில் ஒரு பெரிய பத்திரிகையாளர் வந்து பாலு மகேந்திரா அவர்களை தனியாக அழைத்து சென்று "இவரை வேண்டாம் என மூன்று படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரை நீங்கள் நாயகியாக போட்டு படம் எடுக்கிறீர்களே. ஒரு நாளைக்கு ஒரு படத்தில் இருக்காங்க அவங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டார். அவர் எப்போதுமே பதிலை கைப்பட எழுதித்தான் கொடுப்பார். அவரிடம் இருந்து ஒரு பேப்பர் வாங்கி அவருடைய பதிலை எழுதிக் கொடுத்தார்.

அந்த பதிலைப் பார்த்து பத்திரிகையாளர் போய்விட்டார். அப்போது நான் பாலு மகேந்திரா அவர்களிடம் "நீங்க என்ன எழுதிக் கொடுத்தீங்க" என்று கேட்டேன். "THIS ARTIST WILL BECOME AN IMPORTANT ACTOR IN INDIAN CINEMA. SHE WILL GET A NATIONAL AWARD" என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அவர் எழுதிக் கொடுத்த சில வருடங்களிலேயே ஒரு தடவை அல்ல இரண்டு தடவை தேசிய விருது வாங்கினேன். அவருடைய நம்பிக்கைக்கு அளவே கிடையாது.

"இரண்டு முறை தேசிய விருது வாங்கியது முக்கியமில்லை. அதை தக்கவைத்துக் கொள்வது தான் முக்கியம். இதை உன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா" என்று கேட்டார். அதற்கு பிறகு சில நல்ல படங்கள் மட்டும் தான் நடிக்கணும் என்று முடிவு பண்ணினேன். இதுவரைக்கும் வந்திருக்கிறேன்.

பிரமாண்டமான சினிமா பிரமாண்டமாக இருக்கும், அதை ரசிக்க முடியும். எதார்த்தமான சினிமாவும், எளிமையான சினிமாவும் என்று பாலுமகேந்திரா அவர்கள் எப்போதுமே சொல்வார்.

அவருடைய மறைவுக்கு முன்பு நானும் எனது நண்பர் எம்.ஆர்.பாரதியும் அவரை அடிக்கடி சந்திப்போம். அவர் எங்களிடம் நிறைய தடவைச் சொன்னது, "ஏம்ப்பா.. ஆள் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சம் பணம் போட்டா கொஞ்சம் ஒரு நல்ல சினிமாவை எடுக்கலாமே. நீங்க எல்லாரும் சேர்ந்து பண்ணனுமே" என்று கேட்பார். எப்படி இருக்கீங்க என்று கேட்க மாட்டார். வாப்பா வாப்பா உட்காரு. எப்போ சினிமா பண்ணப் போறீங்க என்று தான் கேட்பார். அவர் கேட்பதன் தீவிரத்தை நான் அறிவேன், எப்படி பண்ண முடியும் என்று யோசிப்பேன்.

இப்போது அவருடைய வார்த்தைகளைப் பற்றி அதிகமாக யோசிக்க ஆரம்பித்து 'அழியாத கோலங்கள்' என்று படம் பண்ணியிருக்கிறோம். பாலு மகேந்திரா சினிமாவைத் தாண்டி வரும் படங்கள் எனக்கு வேண்டாம். அந்த வியாபாரமும் எனக்கு வேண்டாம். அவர் விட்டு போன விஷயங்களை நாங்கள் பிடிக்க நினைக்கவில்லை. அவருடைய பாதையில் நடந்தால் போதும் என்று நம்புகிறேன்" என்றார் நடிகை அர்ச்சனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x