Published : 31 Aug 2021 14:09 pm

Updated : 01 Sep 2021 06:59 am

 

Published : 31 Aug 2021 02:09 PM
Last Updated : 01 Sep 2021 06:59 AM

யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசையின் அனைத்து வடிவங்களிலும் வெற்றிகளைக் குவித்தவர் 

yuvan-birthday-special

தமிழ் சினிமாவில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இன்று (ஆகஸ்ட் 31) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் இசையமைப்பாளராக வெள்ளி விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இசையமைத்த முதல் படமான ‘அரவிந்தன்’ 1997 பிப்ரவரியில் வெளியானது. அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் பரவலான கவனம் ஈர்த்தன. எஸ்.பி.பி. குரலில் அமைந்த ‘ஈரநிலா’ என்று தொடங்கும் மெலடி பாடல் இன்றுவரை இசை ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறது.

1997 முதல் 2021வரை யுவன் எண்ணற்ற வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். திரை இசை சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். தற்போதும் ‘வலிமை’, ‘மாநாடு’, ‘மாமனிதன்’ என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். எப்போதுமே போட்டி நிறைந்த சூழலில் பணியாற்றி வந்திருக்கிறார் யுவன். அவருக்குப் பிறகு வந்த இசையமைப்பாளர்கள் இன்று முன்னணியில் இருந்தாலும் அவர்களுக்குக் கடினமான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளராக தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் யுவன்.

பெரும் மதிப்பைப் பெற்ற திரைப் படைப்பாளி செல்வராகவன், தேசிய விருதுகளை வென்ற நடிகர் தனுஷ் ஆகியோரின் அறிமுகப் படமான ‘துள்ளுவதோ இளமை’ படம்தான் யுவன் ஷங்கர் ராஜா என்னும் சூறாவளி தமிழ்த் திரை இசைச் சூழலில் அதிரடி கிளப்பியது. அதற்கு முன்பு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘தீனா’ போன்ற படங்களில் யுவனின் பாடல்கள் வெற்றியடைந்திருந்தாலும் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்று இளைஞர்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளைகொண்டன. அந்தக் காலகட்டத்தின் திரை இசையில் புதிய போக்கைத் தொடங்கிவைத்தது அந்தப் படம். அதில் தொடங்கி அடுத்த 12 ஆண்டுகளுக்கேனும் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தனியொரு இசை சாம்ராஜ்ஜியத்தை நடத்திவந்தார்.

அந்தக் காலகட்டத்தில் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானும் இந்தி மற்றும் சர்வதேசப் படங்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் யுவனுக்குப் போட்டி இல்லாமல் இல்லை. வித்யாசாகர், பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜ்குமார் சபேஷ்-முரளி போன்ற மூத்தவர்கள் மட்டுமல்லாமல் டி.இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்ற யுவனுக்குப் பிறகு அறிமுகமானவர்களும் தொடர்ச்சியாக வெற்றிப் பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஓராண்டில் வெளியாகும் ஒட்டுமொத்தப் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தப் போட்டியாளர்களைத் தாண்டி ஒவ்வோராண்டும் அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு இசையமைப்பவராகத் திகழ்ந்தார் யுவன் ஷங்கர் ராஜா. ஒவ்வோராண்டின் இறுதியிலும் டாப் டென் பாடல்களில் அவருடைய பாடல்கள் தவறாமல் இடம்பெற்றன. பல பாடல்கள் டாப் டென்னில் முதல் இடத்தில் இருந்தன.

பெரிய நட்சத்திரங்களின் படங்கள், இரண்டாம் நிலை நட்சத்திரங்களைக் கொண்ட மீடியம் பட்ஜெட் படங்கள், மிகக் குறைந்த பட்ஜெட் படங்கள் என அனைத்து வகையிலான படங்களுக்கும் இசையமைத்தார் யுவன். செல்வராகவன். லிங்குசாமி, சுந்தர்.சி, அமீர், வெங்கட் பிரபு போன்ற மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களுடன் யுவன் பணியாற்றிய படங்கள் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காகவும் ரசிகர்கள் மனங்களில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்தவை. அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் விரிவாக அலசப்பட்டுவிட்டன. அவற்றைத் தாண்டி யுவனுக்கு வேறு பல சிறப்புகளும் உள்ளன.

பல அறிமுக/ பிரபலமடையாத இயக்குநர்கள், நடிகர்களின் படங்களுக்கு யுவனின் இசையே முதல் முகவரியைப் பெற்றுத் தந்தது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் 2005இல் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’. இன்று பாலிவுட் வரை சென்று புகழ்பெற்றிருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன் ‘சார்பட்டா’ படத்தின் மூலம் நட்சத்திர ஏணியில் விட்ட இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் ஆர்யா ஆகியோருக்கு முதல் கவனத்தை ஈர்த்துக் கொடுத்த படம் இது. இந்தப் படத்திற்கு ஓப்பனிங் கிடைத்ததற்கு முழு முதற்காரணம் இசையமைப்பாளர் என்று யுவனின் பெயர் இடம்பெற்றிருந்ததுதான். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றவை. குறிப்பாக ‘தீப்பிடிக்க தீப்பிடிக்க’ என்னும் பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இந்தக் கூட்டணியின் அடுத்த படமான ‘பட்டியல்’ படத்துக்கும் யுவனின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது.

ஆர்யா-சோனியா அகர்வால் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஒரு கல்லூரியின் கதை’ திரைப்படத்துக்குப் பாடல்களே இளைஞர் கூட்டத்தைத் திரையரங்கை நோக்கிப் படையெடுக்க வைத்தன. இன்றுவரை அந்தப் படம் அதன் பாடல்களுக்காகவே நினைவுகூரப்படுகிறது. ‘மிர்ச்சி’ சிவா கதாநாயகனாக நடித்த ஆரம்பக் காலப் படங்களில் ஒன்றான ‘16’ யுவனின் பாடல்களால் மட்டுமே கவனம் பெற்றது. இப்படி யுவனின் இசையினாலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அல்லது யுவனின் இசைக்காகவே முதன்மையாக நினைவுகூரப்படும் திரைப்படங்களின் பட்டியல் மிக நீளமானது.

இதைத் தவிர இன்றுவரை வெளியாகாத பல படங்களுக்கு யுவனின் பாடல்கள் எப்போதும் இசை ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பவை. ‘இதுகண்கள் சொல்லும் காதல் செய்தி’ (காதல் சாம்ராஜ்யம்), ’வெண்ணிற இரவுகள்’ (பேசு) என இந்தப் பட்டியல் நீள்கிறது. சீனு ராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் யுவனின் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றவை. மலைப்பகுதி கிராமங்களின் சூழலையும் வாழ்வியலையும் கேட்பவர்களை உணரச் செய்யும் இசையை அந்தப் பாடல்களில் வழங்கியிருந்தார் யுவன். இந்தப் படமும் வெளியாகவேயில்லை.

அதேபோல் யுவன் இசையில் வெளியான படங்களில் பாடல் தொகுப்பில் இடம்பெற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்தபோதும் படத்தில் இடம்பெறாத பல பாடல்கள் உள்ளன. ’புதுப்பேட்டை’ படத்துக்காக அவர் இசையமைத்துப் பாடிய ‘ஒரே நாளில் வாழ்க்கை இங்கே என்றும் ஓடிப் போகாது’ என்னும் பாடல் இன்றுவரை கேட்பவர் அனைவரின் மனங்களையும் உருகவைக்கும் பாடல். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிகப் பெரிய வெற்றி பெற்றவை என்றாலும் முதன்மையான வெற்றி இந்தப் பாடலுக்குத்தான். இன்றும் சமூக ஊடகங்களில் இசை ரசிகர்களுக்கான குழுக்களில் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறாமல் போன ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறவர்களைக் காணலாம். வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இன்றும் பலரால் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் இந்தப் பாடலின் துணுக்குகள் வைக்கப்படுகின்றன. இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு வாழ்வில் துவண்டு போகும் தருணங்களின் மனத்தை தேற்றி உற்சாகமளிக்கும் தன்னம்பிக்கை டானிக் ‘ஒரு நாளில்’ பாடல்தான்.

பாடல்களைத் தாண்டி தீம் மியூசிக் என்னும் வகைமையை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் யுவன் ஷங்கர் ராஜாதான். ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மன்மதன்’, ‘பில்லா’, ’சண்டக்கோழி’, ’சென்னை 600028’ எனப் பல படங்களுக்கு யுவன் அமைத்த தீம் இசைத் துணுக்குகள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. பலரின் மொபைல் ரிங்டோனாக அமைந்தவை.

பாடல்கள், தீம் மியூசிக்கைப் போலவே பின்னணி இசைக்கும் யுவன் சமமான முக்கியத்துவம் அளித்தார். அவருடைய பல படங்களில் பின்னணி இசை காட்சியின் சூழலையும் உணர்வையும் சரியாக உள்வாங்கி பிரதிபலிப்பவையாகவும் மேம்படுத்துபவையாகவும் இருந்தன. அவருடைய பல பின்னணி இசைத் துணுக்குகள் பாடல்கள் அளவுக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழமாகப் பதிந்தன.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் யுவன் ஷங்கர் ராஜா மிகப் பெரிய புகழ்பெற்றார். தான் இசையமைத்த படங்களில் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடல்களைப் பாடினார். ‘மரியான்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘கடல் ராசா’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜி.வி.பிரகாஷ், அனிருத், டி.இமான்,தமன் என இளம் இசையமைப்பாளர்கள் பலரும் யுவனைப் பாட வைத்தனர்.

90ஸ் கிட்ஸின் மிக நெருக்கமான இசையமைப்பாளர் யுவன். அவர்களின் பதின்பருவத்தையும் கல்லூரிப் பருவத்தையும் அந்தக் காலகட்டத்தின் நட்பு, காதல், பிரிவு, ஏக்கம் ஆகிய உணர்வுகளை யுவனின் இசையில்லாமல் கடந்திருக்க முடியாது. இன்று 30களில் இருக்கும் 90ஸ் கிட்ஸின் முதிரா இளமைப் பருவத்தின் அழகான நினைவுகளை அசைபோட அந்தத் தருணங்களை மீண்டும் வாழ்ந்து பார்க்க உதவுபவை புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் அமைந்த யுவனின் பல இசைத் துணுக்குகளும் பாடல்களுமே.

2014இல் வெளியான ‘பிரியாணி’ யுவனின் நூறாவது படம். அந்தப் படத்தில் சிறப்பான பாடல்கள் அமைந்திருந்தன. ஆனால், அதற்கடுத்த ஆண்டுகளில் யுவன் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இருந்த உச்சகட்டப் புகழில் இல்லை. இந்த ஆண்டுகளில் அவர் இசையமைத்த பல படங்களும் பாடல்களும் ரசிகர்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டன. எப்பேர்பட்ட சாதனையாளர்களுக்கும் இது போன்ற சோதனைக்காலங்கள் வருவது இயல்பானதுதான். இதுபோன்ற சரிவுகளையும் வீழ்ச்சிகளையும் தாண்டித்தான் நீடித்து நிலைக்கும் சாதனைகளை பலர் நிகழ்த்தியுள்ளனர். யுவனும் அப்படிப்பட்ட நீண்டகாலம் நீடித்து நிலைத்து நிற்கும் சாதனையாளராகவே இருப்பார். இப்போதும் அவர் இசையமைத்த பல பாடல்கள் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறுகின்றன.

‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூபில் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்திருப்பது அதற்குச் சிறந்த உதாரணம். 2016இல் யுவன் இசையமைத்த ‘தர்மதுரை’ படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன. கிராமியப் பிண்ணனியில் அமைந்த அந்தப் படத்தில் யுவன் இசையில் ‘ஆண்டிபட்டி’ போன்ற மண்மணம் கமழும் காதல் பாடலும் ‘மக்கா கலங்குதப்பா’ என்னும் நாட்டாரியல் பாடலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தன. தமிழ் மண்ணையும் செழிப்பான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இசையை வழங்குவதில் இன்றைய இசையமைப்பாளர்களில் யுவன்தான் முதன்மையானவர் என்பதை கிட்டத்தட்ட பத்தாண்டு இடைவெளியில் வெளியான ‘பருத்திவீரன்’, ‘தர்மதுரை’ ஆகிய இரண்டு படங்களும் சாட்சியம் கூறுகின்றன.

மிக நவீனத்தன்மை வாய்ந்த மேற்கத்திய இசை. தமிழ் மண்ணின், மக்களின் கிராமிய இசை, லயிக்க வைக்கும் மெலடி பாடல்கள், மனதை உருக்கும் மென்சோகப் பாடல்கள், கமர்ஷியல் படங்களுக்குத் தேவையான துள்ளலான பாடல்கள், ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் குத்துப் பாடல்கள், தீம் இசைத் துணுக்குகள், பின்னணி இசை எனத் திரையிசையின் அனைத்து வகைமைகளிலும் யுவன் பதித்த வெற்றி முத்திரைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் நீடித்து தொடர் வெற்றிகளைக் கொடுத்து விருதுகளையும் வெல்வார் என்று உறுதியாக நம்பலாம்.


தவறவிடாதீர்!


Yuvan Birthday SpecialYuvan Shankar RajaU1யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்இளையராஜாஅரவிந்தன்மாநாடுவலிமை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x