Published : 15 Aug 2021 12:05 PM
Last Updated : 15 Aug 2021 12:05 PM

'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பவன் கல்யாண், ராணா நடித்து வரும் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இதர மொழிகளின் ரீமேக் உரிமை விற்பனை செய்யப்பட்டது.

தெலுங்கு ரீமேக்கினை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா ஆகியோர் நடித்து வருகிறார்கள். சாகர் கே.சந்திரா இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு 'பீம்லா நாயக்' எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படத்தின் சிறு டீஸரையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. போஸ்டர் மற்றும் டீஸர் இரண்டிலுமே பவன் கல்யாண் கதாபாத்திரத்தை மட்டுமே காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 2-ம் தேதி படத்தின் இசையும், 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 'பீம்லா நாயக்' படமும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x