Published : 03 Aug 2021 16:27 pm

Updated : 03 Aug 2021 16:27 pm

 

Published : 03 Aug 2021 04:27 PM
Last Updated : 03 Aug 2021 04:27 PM

நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டினேனா? இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை: யாஷிகா ஆனந்த்

yashika-anand-instagram-status-about-d-n-d

கார் விபத்து நடக்கும்போது தான் குடித்திருந்தேனா, இல்லையா என்பது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.


கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றார். மகாபலிபுரம் அருகே நடந்த மோசமான விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்த விபத்து குறித்து போலீஸார், யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாஷிகா குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாகச் சிலர் சமூக வலைதளங்களிலும், அவரது சமூக வலைதளப் பக்கத்திலும் கூடப் பதிவு செய்து வரும் நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பகிர்ந்துள்ளார்.

"சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். வண்டி ஓட்டும்போது நான் குடித்திருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் குடிக்கவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் குடித்திருந்தால் இப்போது சிறையில் இருந்திருப்பேன், மருத்துவமனையில் அல்ல.

போலியான நபர்கள் போலியான செய்திகளைப் பரப்புவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் நீங்கள் கொஞ்சம் மனிதத் தன்மையையும், இறந்த என் தோழியின்பால் கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மருத்துவர்களின் அறிக்கையும் இதேதான் சொல்லும். போலியான ஊடககங்கள், அதிகப் பார்வைகளைப் பெறவும், சப்ஸ்க்ரைபர்ஸைப் பெறவும் எப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர்களெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக நான் சிலர் மீது அவதூறு வழக்கு தொடுத்தேன். ஆனால் கிசுகிசு வேண்டுமென்றால் இது போன்ற நபர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்" என்று யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது தற்போதைய உடல்நிலை குறித்துப் பகிர்ந்திருக்கும் அவர், "இடுப்பு எலும்பில் பல முறிவுகள், வலது கால் முறிந்துள்ளது. என் காயங்களுக்கான அறுவை சிகிச்சை முடிந்து நான் ஓய்வில் இருக்கிறேன். அடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. நாளெல்லாம் படுக்கையில்தான் இருக்கிறேன். அதிலிருந்தபடியே தான் எனது இயற்கை உபாதைகளையும் கழிக்க வேண்டும்.

என்னால் எந்தப் பக்கமும் திரும்ப முடியவில்லை. இப்படியேதான் பல நாட்களாக விறைப்பாக இருக்கிறேன். என் பின்பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது முகத்தில் எதுவும் ஆகவில்லை. ஆனால், இது கண்டிப்பாக எனக்கு மறுபிறவிதான். ஆனால், இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை.

உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் காயப்பட்டிருக்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்திருக்கிறார். நான் நான் இழந்தவற்றை விட இந்தத் தண்டனை பெரிய விஷயமல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.


தவறவிடாதீர்!

யாஷிகா ஆனந்த் விபத்துயாஷிகா ஆனந்த் பதிவுயாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம்யாஷிகா ஆனந்த் தோழியாஷிகா ஆனந்த் சர்ச்சைYashika anand accidentYashika anandYashika anand instagramYashika anand friendYashika anand statusYashika anand injuryYashika anand controversy

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x