Published : 20 Jul 2021 07:09 PM
Last Updated : 20 Jul 2021 07:09 PM

இயக்குநர் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமான திரைப்பயணத்தைக் கொண்ட கலைஞன்

இயக்குநராகவும் நடிகராகவும் பெருந்திரளான மக்களைக் கவர்ந்தவர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

நடிகர் அஜித் ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்த 'வாலி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம்பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. தான் காதலித்த பெண் தம்பியை மணந்துகொண்ட பிறகும் அவளை அடையத் துடிப்பவனின் கதை அது. முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான சப்ஜெகட்டை கையில் எடுத்து அதை முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பார். இந்தப் படம் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றதோடு அஜித். சிம்ரன் இருவருக்கும் அவர்களின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஜோதிகா. சோனா என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்கு ஒரு டூயட் பாடலையும் வைத்திருப்பார் சுர்யா. இப்படி முதல் படத்திலேயே பல புதுமையான சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்து ரசிகர்களை அசத்தினார்.

அடுத்ததாக விஜய் - ஜோதிகாவை வைத்து சூர்யா இயக்கிய 'குஷி' அவருக்கு தெலுங்கு, இந்தி திரையுலகங்களின் கதவுகளைத் திறந்துவைத்தது. காதலர்களுக்கிடையிலான ஈகோவையும் அதனால் ஏற்படும் பிரிவையும் ஈகோவை காதல் வெல்வதையும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்திய 'குஷி' தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தெலுங்கிலும் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மூன்று மொழிகளிலும் சூர்யாவே இயக்குநர்.

தன்னுடைய அடுத்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இயக்கினார் சூர்யா. தெலுங்கு வடிவமான 'நானி'யில் மகேஷ்பாபு நாயகனாக நடித்தார். உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் 'கிழக்குச் சீமையிலே', 'ஆசை' போன்ற சில படங்களிலும் 'குஷி ' படத்திலும் ஒரு காட்சியில் வந்து செல்பவராக நடித்தவர் இந்த இருமொழிப் படத்தின் தமிழ் வடிவமான 'நியூ'வின் கதாநாயகனாக நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்தார். விவகாரமான கதையம்சம், இரட்டை அர்த்த வசனங்கள். கவர்ச்சியை அள்ளித் தெளித்த பாடல்களுடன் நிரம்பிய இந்தப் படம் புதுமையான கதை. சுவாரஸ்யமான திரைக்கதை, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அருமையான பாடல்கள் ஆகியவற்றால் வணிகரீதியாக வெற்றிபெற்றது. அடுத்ததாக சூர்யா இயக்கி நாயகனாக நடித்த 'அன்பே ஆருயிரே' படமும் புதுமையான கதையம்சத்துடன் இருந்தாலும் ரகுமானின் பாடல்களின் துணையால் சுமாரான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். 'கள்வனின் காதலி', 'திருமகன்', 'வியாபாரி', 'நியூட்டனின் மூன்றாம் விதி' என அவர் அப்படி நடித்த எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. 2010இல் பவன் கல்யாணை நாயகனாக வைத்து சூர்யா இயக்கிய தெலுங்கு திரைப்படமான 'புலி' படுதோல்வியைச் சந்தித்தது.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து பிரம்மாண்ட வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் குவித்த 'நண்பன்' படத்தில் ஒரு சிறிய ஆனால் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு நடிகராக சூர்யாவின் இரண்டாம் இன்னிங்கஸைத் தொடங்கி வைத்தது.

அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கி நடித்த 'இசை' திரைப்படம் அதன் புதுமையான கதையம்சத்தாலும் இறுதிக் காட்சியில் எதிர்பாராத ட்விட்ஸ்டாலும் கவனிக்க வைத்தது. அந்தப்படத்தில் சூர்யா இசையமைப்பாளர் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தார்.

இதற்கு அடுத்த ஆண்டில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தது சூர்யாவின் நடிப்புப் பயணத்தில் சிகரம் எனலாம். புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிவிட்டு தற்போது சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்ட சோகத்தில் மதுவுக்கு அடிமையாகி அதனால் குடும்ப வாழ்விலும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நடுத்தர வயது மனிதனாக இந்தப் படத்தில் சூர்யா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக சிங்கிள் ஷாட்டில் உணர்ச்சிகளை உள்ளே அடக்கிக்கொண்டு நெடிய வசனத்தை அவர் பேசும் இறுதிக் காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இதையடுத்து மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தில் அடிமட்ட நிலையில் வாழும் சைக்கோ வில்லனாகவும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் உயர்தட்டு கனவானாக வலம் வரும் வில்லனாகவும் இரண்டு முற்றிலும் நேரதிரான கதாபாத்திர வார்ப்புகளில் எதிர்மறை நடிப்பில் அசத்தினார்.

இனி வில்லனாகவும் துணை நடிகராகவும் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை', நெல்சன் இயக்கிய 'மான்ஸ்டர்' ஆகிய திரைப்படங்களில் நாயகனானார். இதில் 'மான்ஸ்டர்'இல் முழுக்க முழுக்க பாசிடிவ்வான கதாபாத்திரத்தில் அழகாகவும் அம்சமாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. நீண்ட தாமதத்துக்குப் பின் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் சுயநலமும் தந்திரமும் மிகுந்த எதிர்மறை நாயகனாக சூர்யாவின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் 'டான்' திரைப்படத்திலும் சிலம்பரசனை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்திலும் நாயகனாக நடித்துவருகிறார்.

'இறைவி' வெளியான பிறகு கொடுத்த ஒரு பேட்டியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டைக் கொண்ட நட்சத்திர நடிகராக உயர்வதே தன்னுடைய லட்சியம் என்று கூறியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்போதும் அவர் அந்த லட்சியத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்தப் பயணத்தின் போக்கில் கிடைக்கும் வாய்ப்புகளை தன் திறமை மட்டும் உழைப்பின் துணைகொண்டு முன்னேற்றத்துக்கான துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய நடிப்புப் பயணம் பற்றிப் பேசும்போது இலக்கை நோக்கிய பயணத்தில் எது கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டுமே தவிர நான் இதைத்தான் செய்வேன் அதைத்தான் செய்வேன் என்று காத்துக்கொண்டிருந்தால் முன்னேறவே முடியாது என்று பொருள் வரும்படிப் பேசியிருந்தார். வாழ்வில் வெற்றிபெறத் துடிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயம் இது.

இயக்குநராக முதல் இரண்டு படங்களிலேயே அழுத்தமான தடம் பதித்து நாயகனாக நடிக்கத் தொடங்கி முதலில் வெற்றி பிறகு தொடர் தோல்வி ஒரு இடைவெளிக்குப் பிறகு துணை நடிகராக மறு அறிமுகம். வில்லனாக பதவி உயர்வு. மீண்டும் நாயகனாக வெற்றிப் படங்கள் என்று ஏற்றம், இறக்கம் மீண்டும் படிப்படியாக முன்னேற்றம் என்று சூர்யாவின் திரைப்பயணம் அவருடைய திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமானது. இந்த சுவாரஸ்ய பயணம் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் அவருக்கு வாரி வழங்கட்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x