Published : 14 Jul 2021 12:05 PM
Last Updated : 14 Jul 2021 12:05 PM

டிவியில் வருவதை டிவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள்: பாலா குறித்த கேள்விக்கு ரித்திகா பதில்

இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர் ஒருவர் பாலாவைக் காதலிக்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு ரித்திகா பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி 2'. இந்த ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான். இதில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா, கோமாளிகளாகக் கலந்துகொண்ட சிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்ட அனைவருக்குமே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இதில வைல்டுகார்ட் சுற்றில் நுழைந்தவர் ரித்திகா. இவருடன் இரண்டு சுற்றுகளில் பாலா இணைந்ததால் அவர்களது ஜோடி, 'குக் வித் கோமாளி' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’, ‘சிங்கிள் பொண்ணுங்க’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர் ஒருவர் பாலாவைக் காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ரித்திகா பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பாலா என்னுடைய நல்ல நண்பர். டிவியில் வருவதை நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள். அதை டிவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதை வாழ்க்கைக்குள் கொண்டு வரவேண்டும் என்று என்றுமே நினைக்காதீர்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.

பாலாவைப் பற்றி நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் அர்ப்பணிப்பு மிகுந்த ஒரு கலைஞர். திரும்பத் திரும்ப நிறையப் பேர் பாலாவைக் காதலிக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது என்ன மாதிரியான கேள்வி என்றே எனக்குப் புரியவில்லை.

டிவிக்காக ஒரு நிகழ்ச்சி கொடுக்கிறோம். அதை அப்படியே நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். பாலா என் நல்ல நண்பர் என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்''.

இவ்வாறு ரித்திகா கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x