Last Updated : 19 Feb, 2016 05:54 PM

 

Published : 19 Feb 2016 05:54 PM
Last Updated : 19 Feb 2016 05:54 PM

முதல் பார்வை: மிருதன் - பாதி மிரட்சி! மீதி வறட்சி!

தமிழில் உருவாகும் முதல் சோம்பி படம், 'தனி ஒருவன்' , 'பூலோகம்' படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம், ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பு ஆகிய இந்த காரணங்களால் 'மிருதன்' படத்தை பார்க்கத் தூண்டின.

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? என்ற ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கதை: ஊட்டியில் உள்ள மனிதர்கள் ஒரு வைரஸ் தாக்கி வெறி பிடித்த மிருதனாக மாறிவிடுகிறார்கள். இந்த சூழலில் காணாமல் போன தங்கையைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் எஸ்.ஐ. ஜெயம் ரவி. அவர் தங்கையைக் காப்பாற்றினாரா? பெருகி வரும் மிருதன்களிடம் சிக்கியவர் என்ன ஆகிறார்? மிருதன்களை கட்டுப்படுத்தினாரா? அழித்தாரா? என்பது மீதிக்கதை.

தமிழில் முதல் சோம்பி படம் கொடுக்க நினைத்ததற்காக இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனுக்கு வாழ்த்துகள். ஆனால், சோம்பி படத்தை கொடுக்காமல் வெறி நாய் கடி மாதிரி பார்ப்பவர்களை எல்லாம் கடிக்கும் வித்தியாசமான நோய்க்கூறு கொண்ட படத்தைக் கொடுத்தது சுத்த போங்கு சாரே!

ஜெயம் ரவி படத்தை தன் தோளில் தாங்குகிறார். பொறுப்பான அதிகாரி, பாசமான அண்ணன், நல்ல காதலன், கோபமுள்ள இளைஞன் என்று எல்லாவற்றிலும் பொருந்திப் போகிறார். 'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு அவரின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் மெருகேறி இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

லட்சுமி மேனன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இறுதிக்காட்சியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

பேபி அனிகாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான பேய் படங்களில் பட்டையக் கிளப்பும் ஸ்ரீமன் இதில் ஃபெர்பாமன்ஸில் குறை வைக்கவில்லை.

'அதுக்குதான் தம்பி பொலிடிக்கல்ல டச் வெச்சுக்கணும்' என்று சொல்லும் ஆர்.என்.ஆர்.மனோகரன், டாக்டராக வரும் அமித் பர்கவ், ஜெயம் ரவியின் நண்பனாக வரும் காளி வெங்கட் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

எஸ்.வெங்கடேஷ் ஊட்டியை தன் கேமராவில் கடத்தி இருக்கிறார். இமான் இசையில் முன்னாள் காதலி பாடல் சரியான இடத்தில் வராததால் நெருடுகிறது. இமான் சார் உங்களுக்கு என்னாச்சு? பின்னணி இசையில் இரைச்சலைக் கூட்டி இப்படி இம்சை செய்துவிட்டீர்களே!

வெங்கட் ரமணன் இன்னும் சில இடங்களில் கன்டினியூட்டி பார்த்திருக்கலாம். கத்தரி போட வேண்டிய இடங்களிலும் தாராளம் காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை.

சோம்பி படத்துக்கான பரபரப்பு, பதற்றமும், பயமும் படத்தில் இல்லாதது பெருங்குறை. இடைவேளை நெருங்கும்போது அசையாமல் நகராமல் இருக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியிலும் நகர்வேனா என்று அடம்பிடிக்கிறது.

எந்த லாஜிக்கும் பார்க்கத் தேவையில்லை என்று நினைத்துவிட்டாரா இயக்குநர்?

எந்த புத்திசாலித்தனமான ஐடியாவும், ட்ரீட்மென்டும் இல்லாத சோம்பி படம்.... இல்லையில்லை வெறிப் படமாக மிருதன் அமைந்திருக்கிறது. அதிலும் பரபர சமயத்திலும் காமெடியை பன்ச்களாக அள்ளித் தெளித்திருப்பது அந்நியத் தன்மையையும், முக சுளிப்பையும் ஏற்படுத்துகிறது.

ஒரு எஸ்.ஐ எல்லா அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ள முடியுமா? மனிதன் எப்போது மிருதனாக மாறுவான்? அதற்கான நேரம் எவ்வளவு? மிருதனை எப்படி கட்டுப்படுத்தலாம்? இப்படி கேள்விகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த கேள்விகள் எல்லாம் நீண்டுவிடக்கூடாது என்பதற்காக காமெடி, சென்டிமென்ட், காதல் என்று வழக்கமான ஃபார்முலாவை இயக்குநர் இதில் திணித்தாரா? அல்லது தமிழ் ரசிகர்களுக்கு சோம்பி குறித்த புரிதல் இருக்காது என்று தானாக நினைத்துக்கொண்டு, அடக்கி வாசிப்பதாக இயக்குநர் புரிந்துகொண்டாரா? என்பது தெரியவில்லை.

மேக்கிங்கில் இது போன்ற பல விஷயங்களைத் தவற விட்டதால் 'மிருதன்' பாதி மிரட்சியாகவும், மீதி வறட்சியாகவும் இருக்கிறது.

ஆனால், இரண்டாம் பாகத்துகான முதற்புள்ளியை போட்டிருக்கிறார்கள். அந்தப் படமாவது அசலாக இருக்கக் கடவது!







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x