Last Updated : 31 Dec, 2015 06:17 PM

 

Published : 31 Dec 2015 06:17 PM
Last Updated : 31 Dec 2015 06:17 PM

பாலாவின் தாரை தப்பட்டையில் டிஸ்கவரி தமிழ் கேமரா குழு

பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியின் கேமரா குழு இடம் பிடித்துள்ளது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் உள்ள கரகாட்டக்கார இசை மற்றும் நடனக்குழுவினர் பற்றிய படம் இது. இப்படத்துக்காக பாலாவின் 'பி' ஸ்டூடியோஸ் மற்றும் சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களோடு முதன் முறையாக கை கோத்திருக்கிறது டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்.

இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தில் டிஸ்கவரி தமிழ் சேனலின் கேமரா குழு இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் வரும் காட்சிகளில் டிஸ்கவரி தமிழ் சேனல் குழு ஒன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனக்கலைகள் பற்றி ஆய்வு செய்வது போலவும். அந்தக் குழு சுவாமி புலவர் என்ற பிரபல பாடகரை தேடுவது போலவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரின் உட்பகுதிகளில் தேடித்திரிந்து ஒருவழியாக சுவாமி புலவரை கண்டுபிடிக்கும் டிஸ்கவரி தமிழ் சேனல் குழுவானது, அவரது மகன் சன்னாசியையும் அவர் நடத்தி வரும் சுவாரஸ்யமான கரகாட்டக் குழுவையும் கண்டு கொள்கிறது.

பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்துடன் டிஸ்கவரி தமிழ் சேனலின் இணைப்பு குறித்து டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் ஆசியா பசிபிக்கின் தெற்காசிய பிராந்தியத்துக்கான் பொது மேலாளர் ராகுல் ஜோரி கூறும்போது, "டிஸ்கவரி சேனல் இந்திய கலாச்சாரங்களை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் தனக்கென தனி முத்திரை கொண்டுள்ளது. இதேபோல் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் கதைக் களமும் பாரம்பரிய கலையை கொண்டாடும் விதமாக இருப்பதால் இந்த இணைப்பு இயல்பாக சாத்தியமானது" என்றார்.

இயக்குநர் பாலா கூறும்போது, "நவீன உலகில் மறைந்து வரும் அரிய தமிழ் நடனக் கலைகள் குறித்த தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல டிஸ்கவரி தமிழ் சேனல் ஒரு சிறந்த தளம். டிஸ்கவரி தமிழ் சேனலுடன் இணைந்து பணி புரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x