Published : 15 Jun 2021 13:24 pm

Updated : 15 Jun 2021 13:24 pm

 

Published : 15 Jun 2021 01:24 PM
Last Updated : 15 Jun 2021 01:24 PM

வருமான வரி பிடித்தம்: மத்திய நிதியமைச்சருக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்

tamil-film-active-producers-council-writes-letter-to-finance-minister-nirmala-sitharaman

சென்னை

வருமானவரி பிடித்தம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து திரையுலகினர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். படப்பிடிப்பு தாமதம், படங்கள் வெளியிட முடியாத நிலை, வட்டி கட்டுவது என்று பல்வேறு நெருக்கடிக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கரோனா முதல் அலை முடிந்து, திரையுலகம் சகஜ நிலைக்குத் திரும்பிய சமயத்தில் உடனடியாக கரோனா இரண்டாவது அலை தொடங்கியது.


இதனால் இந்திய அளவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானுக்குக் கடிதம் எழுதியுள்ளது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

இந்தக் கடிதத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:

"கரோனா பெருந்தொற்றால் மார்ச் 2020-ல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமுடக்கத்திலிருந்து இந்தியத் திரையுலகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது முதல் அக்டோபர் 2020 வரையிலும், அதற்குபின் 50% இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்கப்பட்ட பின்னும், மக்கள் திரையரங்குகளுக்கு வர விருப்பம் காட்டவில்லை.

இந்நிலையில் ஜனவரி 2021 முதல் திரைத்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருந்த சூழ்நிலையில், ஏப்ரல் 2021 முதல் மாநில அரசு விதித்த இரண்டாம் பொது முடக்கத்தால் திரைத்துறை மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. இன்றைய சூழலில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாக முடியாமலும் தங்கள் மூலதனத்தை மீட்க முடியாமலும் கிடப்பில் உள்ளன.

தமிழ்த் திரைத்துறையில் மட்டும் ரூ.1000 கோடிக்கு மிகையான மூலதனம் 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் வாயிலாக முடங்கிக் கிடக்கின்றது. இச்சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் கடன் வழங்குநர்களிடமும் வங்கிகளிடமும் பெற்ற கடனுக்குண்டான வட்டியைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திரைத்துறை மிகவும் சொற்பமான அளவான 10% லாபத்தை மட்டுமே பெறுகிறது. மீதமுள்ள 9௦% திரைப்படங்கள் தோல்வியைச் சந்திக்கும் அவலநிலையை தாங்கள் நன்கு அறிவீர்கள். திரைத்துறையின் மீது உள்ள பற்று காரணமாக ஆண்டுதோறும் 70% புதிய தயாரிப்பாளர்கள் திரைத்துறையை நோக்கி அணிவகுக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் நினைத்தாலும் 9௦% தோல்வி அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் பல்வேறு காரணங்களால் ஆண்டாண்டுகளாக அப்படியேதான் உள்ளது.

இப்படியான கடினமான சூழ்நிலையிலும் முடங்கிக்கிடக்கும் மூலதனத்தை மீட்டெடுப்பதில் ஐயப்பாடுகள் நிலவிக்கொண்டிருக்கும் வேளையிலும், 194-J பிரிவின் கீழ் ஆதாய உரிமையில் (Royalty) 10% வருமான வரி பிடித்தம் செய்ய வழிவகுக்கும் ஆணையானது, தத்தளித்துக் கொண்டிருக்கும் திரைத்துறையின் மேல் பேரிடியாக விழுந்திருக்கிறது. மார்ச் 2020 வரை ஆதாய உரிமையில் வருமான வரி பிடித்தம் 2% ஆக இருந்த சூழலில் கரோனா பெருந்தொற்றினால் அது 1.5% ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் 2021-22 நிதியாண்டில் அது 10% ஆக மாற்றப்பட்டிருப்பது நஷ்டத்திலிருக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமையாக அமைந்துள்ளது.

மற்ற தொழில்துறைகளைப் போல் அல்லாமல் திரைத்துறையில் உள்ள விநியோகிஸ்தர்கள் முதல் முறை தொழில்முனைவோர் ஆவர். அவர்கள் விநியோகம் செய்த திரைப்படம் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்கள் தொழிலில் தொடர்வாரேயன்றி இல்லையேல் திரைப்படம் விநியோகம் செய்வதைக் கைவிட்டுவிடுவதுடன் வருமான வரி பிடித்தம் செய்த சான்றிதழையும் தயாரிப்பாளர்களிடம் வழங்கமாட்டார்கள். இது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.

மேலும் நஷ்டத்தைச் சந்திக்கும்பட்சத்தில் 10% வருமான வரி பிடித்ததை உரிமைகோரும் முறை 70% முதல் முறை தயாரிப்பாளர்களுக்குப் பொருந்தாது. அத்தகைய தயாரிப்பாளர்கள் தோல்வியைச் சந்தித்தால் திரைத்துறையை விட்டு விலகும் சாத்தியக்கூறுகளே அதிகமென்பதால் வருமான வரி பிடித்ததை உரிமை கோரி எந்தப் பயனும் இல்லை.

தொழில்துறை சம்மேளனமான FICCI மற்றும் பிரபல நிறுவனமான EY மார்ச் 27, 2021 வெளியிட்ட கூட்டறிக்கையில், படப்பிடிப்பு சார்ந்த பொழுதுபோக்குத்துறையின் வருவாய் 2019ஆம் ஆண்டு 11,900 கோடியில் இருந்து 40% குறைந்து, 2020ஆம் ஆண்டு 7200 கோடியாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2021-ல் பெருந்தொற்று காரணமாக அது மேலும் 25% குறைந்து ரூ.5000 கோடியாகக் குறையும். இதனால் கடந்த 2 ஆண்டுகளில் திரைத்துறை 60% வீழ்ச்சியைச் சந்திக்கும். இத்தகைய சூழ்நிலையில் தங்களின் மேலான ஆதரவு தேவைப்படுவதால் 10% வருமான வரி பிடித்தம் செய்யும் முறை போன்ற வரி மாற்றங்கள் திரைத்துறைக்கும் திரையரங்குகளுக்கும் நடத்தப்படும் மூடுவிழா போன்றதாகிவிடும். மேலும் திரைத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆதாய உரிமையில் 10% வருமான வரி பிடித்தம் செய்யும் முடிவைக் கைவிட்டு திரையுலகம் மீண்டெழும் வரை பழைய முறையான 2% வரி முறையையே தொடர வேண்டும். இந்தியத் திரைத்துறையின் எதிர்காலமும் வாழ்வாதாரமும் தங்களிடமே இருப்பதால் 10% வருமான வரி பிடித்தம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து பழைய முறையான 2% வரி முறையையே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தவறவிடாதீர்!

Finance ministerNirmala sitharamanTamil film active producers councilOne minute newsவருமானவரி பிடித்தம்மத்திய நிதியமைச்சர் கடிதம்நிர்மலா சீதாராமன்தயாரிப்பாளர்கள் கடிதம்தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x