Published : 24 Dec 2015 09:23 PM
Last Updated : 24 Dec 2015 09:23 PM

சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல: சரத்குமார்

சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல. அது மன்னிக்கப்பட வேண்டிய குற்றம் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிம்பு பாடி அவரால் வெளியிடப்படாத ‘பீப்’ பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாடல் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனோ பாடப்படவில்லை என்பது அதைக் கேட்ட அனைவருக்கும் புரியும்.

சிம்பு பாடி பதிவு செய்து, வேறு வரிகளைப் போட்டு நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பாடல் அவருக்கு தெரியாமல் வெளிவந்துள்ளது. சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா ஆகியுள்ளார்.

ஒரு தனிமனிதனின் எண்ணங்களும், செய்கைகளும் மற்றவர்களின் உணர்வுகளை, சமூகத்தை பாதிக்கும்போதுதான் அது குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படிப்பட்ட ஒரு பாடலை மேடையிலோ, திரைப்படங்களிலோ, ஆல்பத்திலோ, சமூக ஊடகங்களிலோ சிம்புவே வெளியிட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் டி.ராஜேந்தர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிம்புவின் தாயாரும் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு’ என்ற அடிப்படையில் சிம்பு செய்திருக்கும் தவறை மன்னிப்போம். இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியதுதானே தவிர தண்டிக்கப்பட வேண்டியது அல்ல'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆதரவு

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராதிகா, “சிம்புவை விட பெரிய நடிகர்கள் எல்லாம் படத்தில் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் படங்கள் முறையே சென்சார் ஆகி வெளியாகியிருக்கிறது. அப்படி இருக்கும்போது சிம்புவை மட்டும் விமான நிலையத்தில் குற்றவாளிகளை தேடுவதுபோல ஏன் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று புரியவில்லை” என்று கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x