Last Updated : 09 Nov, 2015 08:03 PM

 

Published : 09 Nov 2015 08:03 PM
Last Updated : 09 Nov 2015 08:03 PM

பசங்க- 2 ஒரு நல்ல அறிவுரை: நடிகர் சூர்யா

'பசங்க-2' படத்தை பார்க்க வரும் குடும்பத்தினர் வீட்டிற்கு போகும் போது ஒரு நல்ல அறிவுரையை எடுத்துச் செல்வார்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

'பசங்க 2' படத்தில் கெளரவ வேடத்தில் மட்டுமே நடித்திருப்பதால், சூர்யா இப்படம் குறித்து எந்த ஒரு பேட்டியும் அளிக்கவில்லை. இப்படம் குறித்து சூர்யாவிடம் கேட்டால், "2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என்றால் தியா, தேவ் என் குழந்தைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் கல்வி மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட அல்லது அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய திரைப்படங்களை தயாரித்து வெளிக்கொண்டு வருவதே.

அதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே புதிய இயக்குநராக இருந்தாலும் நல்ல கதைகளை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டது. அதற்காக சுமார் ஐம்பது, அறுபது கதைகள் கேட்டோம். கதைகள் சரியாக அமையாத காரணத்தால் மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதிகாத்து வந்தோம். அப்போது இயக்குநர் பாண்டிராஜ் என்னைச் சந்தித்து, கதையைச் சொல்லி இந்த மாதிரியான ஒரு கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் நிறுவனம் வாயிலாக மக்களை சென்றடைவது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும் என்றார்.

இந்த படம் என் மூலம் வெளிவருவதற்கு இயக்குநர் பாண்டிராஜுக்கு நான் என் முதல் நன்றியை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். இயக்குநர் பாண்டிராஜ் இரண்டு வருடம் குழந்தைகளைப் பற்றி ஆய்வு செய்து, குழந்தைகளுடன் ஒன்றிணைந்து பல காட்சிகளை வடிவமைத்து அதை எங்களிடம் காண்பித்து, இது போல கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் மூலம் வரவேண்டும் என்று கூறியதின் பலன் தான் இந்த ஹைக்கூ(பசங்க-2).

மழலைகள் என்றாலே அழகு. மழலைகளின் பேச்சில் இருந்து அவர்களின் உலகம் வரை எல்லாமே அழகு என்று தான் சொல்ல வேண்டும். அவை அனைத்து நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. குழந்தைகளின் உலகம் கால நிலைக்கு ஏற்றார் போல மாறுபவை. எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்த தருணங்கள் வேறு, இப்போது இருக்கும் குழந்தைகள் அல்லது இன்னும் ஐந்து வருடத்திற்கு பின் வருங்கால சந்ததியினராக இருந்தாலும் சரி அவர்களின் உலகம் வேறு. அதே போல் நகரங்களில் வாழும் குழந்தைக்கும் கிராமங்களில் வாழும் குழந்தைக்கும் உள்ள உலகங்கள் வேறு. அவை அனைத்தும் நாம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அவர்கள் கற்றுக் கொள்ள கூடியவைகள் உள்ளன.

அதனால் இந்த படத்தை பார்க்க வரும் குடும்பத்தினர் பார்த்து விட்டு வீட்டிற்க்கு போகும் போது ஒரு நல்ல அறிவுரையை எடுத்துச் செல்வார்கள். இதில் நான் மிகவும் சாதாரணமாக நடித்துள்ளேன் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். இதுதவிர வரும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவிதமான அறிவுரை கேட்டுவிட்டு செல்வார்கள்" என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x