Last Updated : 13 Mar, 2021 01:37 PM

 

Published : 13 Mar 2021 01:37 PM
Last Updated : 13 Mar 2021 01:37 PM

முதல் பார்வை: தீதும் நன்றும்

சென்னை

குற்றவுலகம் குறித்த மூன்றாம் உலக சினிமாக்களில் பெரும்பாலும் ஏழ்மை, வறுமை என விளிம்பு வாழ்க்கையில் உழலும் மனிதர்கள் வாழும் நிலவெளியே (Landscape) முக்கிய அம்சமாக இடம் பிடித்துக்கொள்கிறது. லத்தீன் அமெரிக்க சினிமாவில், இன்றைக்கும் எளிய மக்கள் குற்றவுலகின் ஒரு பகுதியாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வளவு ஏன்.. சென்னையில் குடிசை மாற்று வாரியம் ஒரு பெரும் குடியிருப்பையே புறநகரில் உருவாக்கியது. எளிய மக்களை புறநகரில் தள்ளினாலும் சென்னை மாநகரத்தின் உழைப்புக்கான தேவையில் பெரும்பகுதியை ஈடுகட்டுவது அந்த மக்கள்தான்.

ஆனால், புதிதாக உருவான அந்தக் குடியிருப்புப் பகுதியின் மீதான ஒவ்வாமையை கக்குகிறது உயர்தட்டு வாழ்க்கை. வறுமையில் உழல்பவனிடம் நேர்மையும் இரக்கமும் இருக்காது என்கிற சித்தரிப்பு எல்லோருக்கும் பொருந்தாதுதான். சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் வர்க்கங்களிலும் சில உதிரிகள், குற்றவாளிகள் இருக்கக்கூடும், இருக்கிறார்கள். அதுவே எளிய, விளிம்பு நிலை மனிதர்களுக்கும் பொருந்தும். அதேபோல் அவர்களுக்கும் வாழ்க்கைக்கான எல்லா தவிப்புகளும் தேவைகளும் எதிர் முடிவுகளும் உண்டு என்பதை 'கச்சாவான' திரைப்பட உருவாக்கத்துடன் சொல்லியிருக்கிறது 'தீதும் நன்றும்'.

ஆங்கிலக் கலப்பின்றி இப்படியொரு தலைப்பு வைத்த காரணத்துக்காகவே இயக்குநர் ராசு.ரஞ்சித்தைப் பாராட்டலாம். தீமையோ, நன்மையோ எதுவொன்றும் நாம் செய்யும் செயல்களின் பின்விளைவுகளால் வருவது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. தலைப்புக்கான 'அழகியல்' படம் நெடுகிலும் அற்புதமாகப் பதிவாகியுள்ளது.

சென்னையில் பின்தங்கிய பகுதியில் வசிக்கிறார்கள் சிவா ( ராசு ரஞ்சித்), தாஸ் (ஈசன்) ஆகிய இருவரும். மீன்பிடித் துறைமுகத்தில் பகல் முழுக்கக் கடுமையாக உழைத்துப் பெறும் கூலி, அவர்களது தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. இதனால், தங்கள் தேவைகளுக்காக மாறன் (சந்தீப் ராஜ்) என்பவனை நம்பி முகமூடி அணிந்து பெட்ரோல் பங்க்கில் திருடுகிறார்கள். ஆனால், திருட்டு இவர்களுக்குத் தொழில் அல்ல. எல்லோரையும்போல் காதல், குடும்பம் என வாழ நினைக்கும் சாமானியர்கள்தான்.

தாஸின் பின்னணி தெரிந்த நிலையில், அவன் தரும் உறுதிமொழியை நம்பி, அவனைக் காதலித்து மணக்கிறாள் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (அபர்ணா பாலமுரளி). ஆனால், திருட்டின் வழியே அடைந்த பணம், ஒரு கட்டத்தில் காதல் மனைவிக்குக் கொடுத்த உறுதியை மீறும்படி செய்கிறது. இரண்டாவது திருட்டில் வசமாகச் சிக்கி, குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றுத் திரும்புகிறார்கள் தாஸும் சிவாவும். தண்டனை அவர்களைத் திருத்தியதா, வாழ்க்கையின் யூடர்ன் வளைவுகள் அவர்களை எந்த இடத்தில் நிறுத்தியது என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் பாராட்ட வேண்டிய கலையம்சங்கள் பல. ஓர் எளிய கதையை, அதில் உலவும் கதாபாத்திரங்கள் வாழும் நிலவெளியை ஒரு கதாபாத்திரம்போலவே உயிர்ப்புடன் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அதற்கு கெவின் ராஜின் ஒளிப்பதிவு அற்புதமாகக் கைகொடுத்திருக்கிறது. அதேபோல. காதல், குடும்பம் என வாழும் எளிய மனிதர்கள் குற்றவுலகில் சிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் எதிர்பாராத் தன்மையை, இயலாமையைத் தனது சிறப்பான பின்னணி இசையால் உணர்வுபூர்வமாக மீட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

திரைக்கதை, எதிர்பார்த்த பாதையில் பயணம் செய்வது படத்துக்குப் பலவீனமாக இருக்கிறது. ஆனால், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்த வகையில், அவர்களை வேலை வாங்கிய விதத்தில் முற்றிலும் புதிய அனுபவத்தை நமக்குத் தருகிறார் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான, இந்தப் படத்தின் இயக்குநர் ராசு.ரஞ்சித்.

திரைக்கதையை விட கதாபாத்திரங்களுக்கு போதிய 'முழுமை'யைக் கொடுத்து எழுதிய வகையில் ராசு ரஞ்சித் கவனிக்க வைக்கிறார். கதாநாயகன் தாஸா, சிவாவா என்கிற எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் அதனதன் இயல்பில் சிக்கும் விதியின் குழியில் அவை விழுந்து நொறுங்குவதை வெகு இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், சண்டைக் காட்சிகளும் வன்முறை தெறிக்கும் காட்சிகளும் தமிழ் சினிமாவுக்கேயுரிய கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் சிக்கிக்கொள்வது இயல்பான படத்தில் பின்னடைவாக மாறிவிடுகிறது.

தாஸாக நடித்திருக்கும் ஈசன், சிவாவாக நடித்திருக்கும் ராசு ரஞ்சித் கதாபாத்திரங்களாக நம்ப வைக்கிறார்கள். அதேபோல கதாநாயகிகள் இருவரும் (அபர்ணா பாலமுரளி, லிஜோ ஜோஸ் மோல்) சுமதியாகவும் தமிழாகவும் மாறிக் காட்டியிருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரங்களில் வந்து செல்பவர்களிடமும் செயற்கைத்தனம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.

முதல் முறையாக, சுதந்திர கிறிஸ்தவ சபை ஒன்றில் நடைபெறும் திருமணம் எப்படியிருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதுபோன்ற நுணுக்கங்கள் ரசிக்கும் படியிருக்கிறது. 'கச்சாத்தன்மை' கூடியிருக்கும் சித்தரிப்பில் படத்தின் முடிவு எதிர்பார்த்தபடி அமைந்துவிடுகிறது. அதை இன்னும் வலுவாக, முற்றிலும் எதிர்பாராத இயல்புடன் மாற்றி அமைத்திருந்தால் இந்தப் படம் குற்றவுலகின் உதிரி மனிதர்களை வெகு இயல்பாகச் சித்தரித்த படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும். ஆனால், அதைக் கோட்டைவிட்டுவிடுகிறது 'தீதும் நன்றும்'.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x