Last Updated : 12 Mar, 2021 04:26 PM

 

Published : 12 Mar 2021 04:26 PM
Last Updated : 12 Mar 2021 04:26 PM

’திருமதி கிரேஸிமோகனுக்கு கிட்னி கொடுத்தேன்!’ - மாது பாலாஜி நெகிழ்ச்சி 

‘திருமதி கிரேஸி மோகனுக்கு கிட்னி கொடுத்தேன் என்பதில் நெகிழ்ச்சியும் நிறைவும் எப்போதும் உண்டு’ என மாது பாலாஜி தெரிவித்தார்.

கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

‘உலக கிட்னி தினம். இந்த உலக கிட்னி தினத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? காரணம் இருக்கிறது. நானொரு டோனர். என்னுடைய ஒரு கிட்னியை நான் டொனேட் செய்திருக்கிறேன்.

நாங்கள் ஐந்து ஆறு முறை அமெரிக்கா சென்றிருக்கிறோம். கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் முப்பது ஷோ செய்திருக்கிறோம். எல்லாமே சக்ஸஸ் டிராமாஸ்தான். 99ல் இப்படிச் செல்ல ஆரம்பித்தோம். 2014ல் ஐந்தாவது முறை சென்றோம்.

இதில், மூன்றாவது தடவை செல்லும்போது, அதாவது 2004ல் 30 ஷோ வரை போடுவதாக இருந்தோம். ’கிரேஸி கோஸ்ட்’ எனும் நாடகத்தை எடுத்துக் கொண்டு நாங்கள் அமெரிக்கா பயணமானோம். மொத்தம் 12 பேர். டைரக்டர் காந்தன், ஜி.சீனிவாசன், அப்பா ரமேஷ், கிரேஸிமோகன், மது, உமா என எல்லோரும் சென்றோம்.

அமெரிக்காவில் இறங்கி டிராமா போட்டோம். 15 ஷோ வரை போட்டிருப்போம். ரொம்பவே சக்ஸஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருந்தது. நான்கைந்து வாரம் ஓடியது. நாங்களும் பீனிக்ஸ் வந்தோம். அங்கே ஏராளமான இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.
ஒருநாள் காலையில் என் இளைய சகோதரரிடம் இருந்து சென்னையில் இருந்து போன். என் சிஸ்டர் இன் லாவுக்கு உடல்நலமில்லை. அதாவது கிரேஸி மோகனின் மனைவிக்கு இந்தப் பிரச்சினை. கிட்னி பழுது. மாடிப்படியில் மூச்சுவாங்கியது. மருத்துவமனை சென்று டெஸ்ட் செய்தார்கள் என்றெல்லாம் சொன்னார். ஆனால் எங்களுக்கு இதெல்லாம் புதிது. என்ன சொன்னார் என்றே புரிபடவில்லை. ‘மருந்து கொடுத்தால் சரியாகிவிடும்’ என்று நினைத்துக் கொண்டோம்.

மறுநாள்... மீண்டும் போன் வந்தது. இரண்டு கிட்னியும் பழுதாகிவிட்டது. டயாலிஸிஸ் செய்யவேண்டும். மாற்று கிட்னி பொருத்தவேண்டும் என்று சொன்னார்கள். எங்கள் எல்லோருக்கும் பயங்கர ஷாக். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த மாதிரியான தருணத்தில் காந்தனிடம் பொறுப்பை கொடுத்துவிடுவோம். அவன் நன்றாக யோசித்து, நல்ல தீர்வாக எடுப்பான்.

‘எல்லோரும் சென்னை கிளம்பிவிடலாம்’ என்றோம். ‘கொஞ்சம் பொறு’ என்றான் காந்தன். பிறகு நானும் காந்தனும் தனியே உட்கார்ந்து பேசினோம். சென்னைக்கு போன் செய்து டாக்டரிடம் பேசினோம். ’நீங்கள் இப்போது வந்தாலும் உடனே எதுவும் செய்துவிட முடியாது. முதலில் டோனர் வேண்டும். பிறகு அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் எடுக்கவேண்டும். அதற்கெல்லாம் சில நாட்களாகும்’ என்றார். ’கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகும்’ என்றார். அதன்படியே மீதமுள்ள பதினைந்து நாட்களும் ஷோ போடுவது என்று காந்தன் முடிவு எடுத்தான்.

நியூ ஜெர்ஸியில் இருக்கும் பார்கவி சுந்தர்ராஜன் தான் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தவர். ‘எங்களுக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை மோகன். நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள்’ என்றார். ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி நாடகத்தை செய்தோம். ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. 2004ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சென்னைக்கு வந்தோம்.

கிட்னி தருவதற்கு நான், என் தம்பி பாஸ்கர், என் மனைவி மீரா ஆகியோர் ரெடியாக இருந்தோம். டெஸ்ட் எடுத்துப் பார்த்துத்தான் முடிவு செய்யமுடியும் என்றார் டாக்டர். சின்னச் சின்ன விஷயங்களால், என் மனைவியும் என் தம்பியும் கொடுக்கமுடியாது என ரிப்போர்ட் வந்தது.
எனக்கு ஒவ்வொரு டெஸ்ட்டாக எடுக்கப்பட்டது. நான் கொடுக்கலாம் என டெஸ்ட் முடிவு சொன்னது. எனக்கு ஒரு நிறைவு... ஆபரேஷன் தேதியும் முடிவு செய்யப்பட்டது. அது 2005ம் ஆண்டு. எங்கள் நண்பர் சித்ரா பார்த்தசாரதியின் மூலமாக டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் நட்பு கிடைத்தது.
ஏற்கெனவே யார் யாருக்கோ கிட்னி கொடுத்தவர்களின் மனநிலை, இப்போது அவர்களின் ஆரோக்கியம் முதலானவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.எங்கள் குழுவில் இருந்த விச்சு என்பவரின் மனைவி, அவரின் உறவினருக்கு கிட்னி கொடுத்திருந்தார். அவர்கள்தான் எனக்கு மிகப்பெரிய தைரியம் கொடுத்தார்.

ஆபரேஷன் நாள் வந்தது. என்னுடைய கிட்னி எடுக்கப்பட்டு அவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்குப் பிறகு நானும் சரி, என்னுடைய சிஸ்ட்ரர் இன் லாவும் சரி... டாக்டர் சொன்ன அறிவுரையின்படி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தவிர டெனோட்டருக்கு மருந்து மாத்திரைகளெல்லாம் கிடையாது. இன்றைக்கும் அவர் உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகிறார். டாக்டரும் கூட டோனருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பயத்தையெல்லாம் போக்கினார்.

இன்று வரை உற்சாகத்துடன் டிராமா போட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காந்தன் காரணம். என் டீமும் அப்படித்தான் உறுதுணையாக இருந்தார்கள். கடவுளின் கருணையும் எங்களுக்கு இருந்தது.

வருடாவருடம் உலக கிட்னி தினத்தின் போது, டாக்டர் எங்களை அழைப்பார். அங்கே கிரேஸி மோகன் பேசுவான். ’சால்ட் விஷயத்தில் அசால்ட்டாக இருக்காதீர்கள் என்று ஜாலியாகச் சொல்லுவான்.

நானும் இதை இதுவரை சொன்னதில்லை. இப்போது டாக்டரே சொல்லச் சொன்னார். எல்லோருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு வரட்டுமே என்றார்.அதனால்தான் சொல்லவேண்டும் என்று தோன்றியது. திருமதி கிரேஸி மோகனுக்கு கிட்னி கொடுத்தேன் என்பது பாக்கியம் எனக்கு’’

இவ்வாறு மாது பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x